அமீரக செய்திகள்

துபாயில் இன்றும் மெட்ரோ சேவை பாதிப்பு..!! கனமழையால் பாதிக்கப்பட்ட மெட்ரோ நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரம்..!!

துபாயில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெய்த அதீத கனமழையால் துபாய் முழுவதும் உள்ள பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்பட்டது. அதிலும் குறிப்பாக துபாய் மெட்ரோ சேவைகளானது அமீரகத்தில் பெய்த வரலாறு காணாத அளவு மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மெட்ரோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் பல நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.

அத்துடன் சென்டர்பாயிண்ட் நோக்கி துபாய் மெட்ரோ இயக்கங்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 200 பயணிகள் ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் பல மணி நேரம் போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாயில் உள்ள அனைத்து மெட்ரோ மற்றும் சாலை பயனர்களுக்கும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், துபாய் மெட்ரோ இன்று (ஏப்ரல் 17) ரெட் மற்றும் கிரீன் பாதையில் உள்ள நிலையங்களில் திட்டமிடப்பட்ட பராமரிப்பை அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணி மெட்ரோ நேரங்கள் மற்றும் நிலையங்கள் இரண்டையும் பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, RTA ஆனது, ரெட் மற்றும் கிரீன் லைனில் உள்ள குறிப்பிட்ட நிலையங்களில், பயணிகள் தங்களுடைய இடங்களுக்குச் செல்வதற்கு உதவ, இலவச ஷட்டில் பேருந்து சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட நிலையங்கள் அல்லது இந்த ஷட்டில் பேருந்து சேவைகள் கிடைக்கும் இடங்கள் குறித்த தெளிவான விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த நிலையில் இந்த மோசமான வானிலையானது இன்றும் தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!