அமீரக செய்திகள்

UAE: அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.. குடியிருப்பாளர்களை அறிவுறுத்திய தேசிய பேரிடர் மையம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) நாட்டில் மூன்று நாட்களுக்கு (ஏபரல் 15 – 17) இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அமீரகத்தின் அனைத்து எமிரேட்களிலும் நேற்று இரவு முதலே பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் புகுந்து சாலைகளும், தெருக்களும் குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் தெருக்களில் வெள்ளம் புகுந்ததால் ஓரிரு சாலைகள் இடிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளன. இதனால் குடியிருப்பாளர்கள் தங்களின் வீட்டிலேயே இருக்குமாறு அமீரக அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகமான தேவைகளில்” மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வெள்ள சேதத்திலிருந்து தங்களின் வாகனங்களை பாதுகாத்துக் கொள்ள, வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து தொலைதூரத்தில் அல்லது பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துமாறும் வாகன ஓட்டிகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

தண்ணீர் தேங்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முயன்றதால், பல வாகனங்கள் பழுதடைந்துள்ளதாகவும், ராட்சத ஆலங்கட்டி மழையால் சில பகுதிகளில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும் வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். மேலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் சில குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனமழை காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அமீரக அரசு குடியிருப்பாளர்களை தற்போது அறிவுறுத்தியிருப்பது இரண்டாவது முறையாகும்.  இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில், நிலையற்ற வானிலை காரணமாக பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளுக்கான சாலைகள் மூடப்பட்டதால், குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையில், அமீரகத்தில் இன்றும் நாளையும் நிலையற்ற வானிலை தீவிரமடையும் என்பதால், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் தொலைதூர கற்றலை செயல்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. கூடவே, அனைத்து அரசு ஊழியர்களும் இன்றும், நாளையும் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறும் அமீரக அரசால்  அறிவுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!