அமீரக செய்திகள்

UAE: பள்ளிக்கு சென்ற 7 வயது ஆசிய சிறுவன் சடலமாக மீட்பு..!! பூட்டிய காருக்குள் மூச்சுவிட முடியாமல் பரிதாபமாக பறிபோன உயிர்..!!

ஷார்ஜாவில் வசிக்கும் ஆசிய நாட்டைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்ற நிலையில், காருக்குள் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (மே 7) பிற்பகல் அரங்கேறிய இந்த சம்பவம் குறித்து ஷார்ஜா காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், தங்கள் குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்வதற்கும், கொண்டு வருவதற்கும் உரிமம் பெறாத ஒரு பெண் ஓட்டுநரிடம் ஒப்பந்தம் செய்திருந்தது தெரிய வந்துள்ளது.

வழக்கம் போல, நேற்று செவ்வாய்க்கிழமை அனைத்து மாணவர்களும் அப்பெண்ணின் காரில் பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளியை கார் அடைந்ததும் அந்த சிறுவனைத் தவிர மற்ற சிறுவர்கள் அனைவரும் இறங்கியுள்ளனர். ஆனால், அந்த பெண் ஓட்டுநர் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று சரிபார்க்காமல் காரின் கதவை அடைத்துவிட்டு காரை பள்ளியின் வெளியில் நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார்.

காலையிலிருந்து பள்ளிக்கு வெளியே வெயிலில் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கித் தவித்த அந்த சிறுவனுக்கு, வெயிலின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு அச்சிறுவனின் உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளது. இதையடுத்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரம் வந்தபோது, ​​அந்த சிறுவன் காரில் இறந்து கிடந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஷார்ஜா காவல்துறை உரிமம் பெறாத வாகன ஓட்டிகளுடன் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு எதிராக எமிரேட்டில் வசிக்கும் அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பொறுப்பான அதிகாரிகளின் தொடர் கண்காணிப்புக்கு உட்பட்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூடிய நியமிக்கப்பட்ட பள்ளி பேருந்துகளில் மட்டுமே தங்களின் குழந்தைகளை அனுப்புமாறும் அதிகாரிகள் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளனர்.

மாறாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனிப்பட்ட முறையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம், ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை மற்றவர்களை விடவும் பெற்றோர்கள்தான் சிறப்பாக உறுதிப்படுத்த முடியும் என்றும் ஷார்ஜா காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு எடுத்துரைத்துள்ளது.

பொதுவாக, பள்ளிப் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை விடவும் இது போன்று உரிமம் பெறாமல் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் குறைவு என்பதால் சில பெற்றோர்களும் இவர்களை நாடுகின்றனர். எனினும் சில நேரங்களில் வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் இது போன்று தவிர்க்க முடியாத உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!