அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 வருட “ப்ளூ ரெசிடென்சி விசா”..!! முழு விபரங்களும் இங்கே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக ‘ப்ளூ ரெசிடென்சி’ என அழைக்கப்படும் மற்றொரு நீண்ட கால குடியிருப்பு விசாவை அமீரக அரசு அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விசாவானது 10 ஆண்டுகள் வரை நாட்டில் தங்க அனுமதிக்கிறது.

இது குறித்து அமீரக அரசின் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்த விசா அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் துறையில் விதிவிலக்கான பங்களிப்புகள் மற்றும் முயற்சிகளை செய்த நபர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் உட்பட உலகளாவிய விருது வென்றவர்கள், சுற்றுச்சூழல் பணிகளில் சிறந்த ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்ற சுற்றுச்சூழல் நடவடிக்கையை ஆதரிப்பவர்களுக்கு இந்த புதிய ப்ளூ ரெசிடென்சி வழங்கப்படும்.

எனவே, அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் மூலம் தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இத்துறை தொடர்புடைய அதிகாரிகள் நீண்ட கால விசாவிற்கு தனிநபர்களை பரிந்துரைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது, ​​“நமது பொருளாதாரத்தின் நிலைத்தன்மை நமது சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமீரக அரசு தற்போது புதிதாக அறிவித்திருக்கும் இந்த புதிய குடியிருப்பு விசாத் திட்டமானது, 2024 ஆம் ஆண்டை நிலைத்தன்மையின் ஆண்டாகக் குறிக்க அமீரகம் தொடங்கியுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், அமீரக அரசாங்கம் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் மற்றும் மனிதாபிமான முன்னோடிகள் போன்றவர்களுக்கு கோல்டன் விசாக்கள் என்ற 10 ஆண்டு குடியிருப்பு விசாத் திட்டத்தை அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திறமையான தொழில் வல்லுநர்கள், ஃப்ரீலான்ஸர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு கிரீன் விசாக்கள் எனப்படும் 5 ஆண்டு ரெசிடன்சி விசாக்களை அறிவித்தது. அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பாக கேமிங் துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களுக்காக மேலும் ஒரு 10 வருட நீண்ட ரெசிடன்சி விசாவை அமீரக அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!