UAE: 75 சதவீத தள்ளுபடியுடன் எக்கச்சக்கமான வெகுமதிகளை வழங்கும் ஷார்ஜா சம்மர் ப்ரொமோஷன் ஆரம்பம்..!!

ஷார்ஜாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் ஷார்ஜா சம்மர் ப்ரொமோஷனின் 2024-ம் ஆண்டிற்கான சீசன் வரும் ஜூலை 1 முதல் மீண்டும் கோலாகலமாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் எமிரேட் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பிரபல முன்னணி சர்வதேச பிராண்டுகளுக்கு 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வருடத்திற்கான ஷார்ஜா கோடைகால ப்ரொமோஷன்களானது ஒரு புதிய அடையாளம் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஷார்ஜா எமிரேட்டை முதன்மையான ஷாப்பிங் இடமாக நிறுவும் நோக்கத்துடன் மீண்டும் வந்துள்ளன என்றும் இந்த ஆண்டு, இது ஷார்ஜா சுற்றுலாத்துறையுடன் ஒத்துழைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வருடம் இது GCC முழுவதிலும் இருந்து வரும் பார்வையாளர்களைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த ப்ரொமோஷனில் 75 சதவீதம் வரை தள்ளுபடிகள், இலவசங்கள் மற்றும் 3 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள ரேஃபிள் பரிசுகளுடன் பெரிய வெகுமதிகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பிரச்சாரம் முழுவதும் அனைத்து ஷாப்பிங் மால்களிலும் 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும் என்று ஷார்ஜா சம்மர் ப்ரொமோஷன் 2024 இன் செய்தித் தொடர்பாளர் ஆயிஷா சலே கூறியுள்ளார்.
இது குறித்து கூறுகையில் “எனினும், பிரச்சாரத்தின் கடைசி இரண்டு வாரங்களான ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 1 வரை பள்ளிக்குச் செல்லும் ப்ரொமோஷனின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பெரும்பாலான பிராண்டுகளுக்கு 80 சதவீத தள்ளுபடியை அனுபவிக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும், இந்த ப்ரொமோஷன் 20 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரேஃபிள் டிராக்களுடன் வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு பொருட்களை வாங்கும் நபர்கள் குறைந்தபட்சம் 200 திர்ஹம்ஸ் செலவழித்து கூப்பனைப் பெறுவதன் மூலம் டிராக்களில் நுழையலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 க்கும் மேற்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் பரிசுகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுப்பொருட்களில் தங்கக் கட்டிகள், ஷாப்பிங் வவுச்சர்கள் மற்றும் கார்கள் அடங்கும். இந்த பரிசுகள் அனைத்தும் 3 மில்லியன் திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரொமோஷனில் ஷார்ஜா முழுவதும் உள்ள எட்டு ஷாப்பிங் மால்கள் மற்றும் 16 ஹோட்டல்கள் அடங்கும் என்பதோடு இது அனைத்து பார்வையாளர்களுக்கும் விரிவான ஷாப்பிங் மற்றும் விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் ஷார்ஜாவில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 70க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அனைத்து செயல்பாடுகள், சலுகைகள் மற்றும் டிரா முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான shjsummer.ae இல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel