50 டிகிரி வெயிலிலும் அமீரகத்தில் பெய்த ஆலங்கட்டி மழை.. இன்றும் சில இடங்களில் மழை தொடரும் என NCM தகவல்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலம் தொடங்கி, நாட்டில் கடும் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த கோடையில் அதிகபட்ச வெப்பநிலையாக அமீரகத்தில் கடந்த ஜூன் 21 அன்று 49.9 ° C ஆக அல் தஃப்ரா பிராந்தியத்தில் இருக்கக்கூடிய மெசைராவில் பதிவாகியிருந்தது. இவ்வாறு கடும் வெயில் நிலவும் வேளையிலும் அமீரகத்தின் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பதிவாகியுள்ளது. கனமழை மட்டுமல்லாமல் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது குடியிருப்பாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி (NCM), அல் அய்னில் உள்ள காத்ம் அல் ஷிக்லாவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை தொடர்பான சமூக ஊடகக் கணக்கான storm_ae ஆல் பகிரப்பட்ட வீடியோவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதை காணலாம்.
View this post on Instagram
அத்துடன் அல் தைத் செல்லும் புதிய கோர் ஃபக்கான் சாலையிலும் நேற்று மிதமான மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஷார்ஜாவின் மலேஹாவிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க இன்றும் அமீரகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளதுடன் இந்த பகுதியில் வசிப்பவர்கள் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட கடுமையான வானிலைக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel