UAE: உங்களின் எமிரேட்ஸ் ஐடியில் இந்த 20 விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாள அட்டையாக விளங்கும் எமிரேட்ஸ் ஐடியானது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு சிறப்பம்சங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸி விசா ஸ்டிக்கரின் தேவையை நீக்கியதாகும். அதற்கு பதிலாக எமிரேட்ஸ் ஐடி ஒன்றே போதும் என்று அறிவிக்கப்பட்டது.
அதாவது எமிரேட்ஸ் ஐடி ஒன்றிலேயே அந்நபரின் அனைத்து தகவல்களும் பெறும் அளவுக்கு எமிரேட்ஸ் ஐடியில் பல புதிய நவீன அம்சங்கள் இடம்பெற்றன. இந்த தகவல்களைப் பெறுவதற்கான முக்கியமான ஒன்று எமிரேட்ஸ் ஐடியில் உள்ள சிறிய சிப் (chip) ஆகும். இதன் மூலம் அந்த எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் நபரின் 20 வெவ்வேறு தகவல்களை அடையாளம் காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) 2021 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை எமிரேட்ஸ் ஐடிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவு, கையொப்பம் மற்றும் புகைப்படம் போன்ற குறிப்பிட்ட தகவல்கள் மட்டும் இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் இதில் ‘காணமுடியாத தரவு’ உள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் ICP இன் ‘இ-இணைப்பு’ அமைப்பு மூலம் படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கார்டின் பின்புறத்தில் பார்க்கக்கூடிய எமிரேட்ஸ் ஐடியில் உட்பொதிக்கப்பட்ட சிப், அதிக டேட்டா திறனைக் கொண்டுள்ளது. இது கார்டு வைத்திருப்பவர் தொடர்பான பல தகவல்களைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ICP இன் படி, மின்னணு சிப்பில் அடையாள அட்டை வைத்திருப்பவர் பற்றிய பின்வரும் தகவல்களை பெறலாம். அவை:
- அடையாள எண்
- வெளியிடப்பட்ட தேதி (date of issue)
- காலாவதி தேதி
- முழு பெயர் (அரபு மற்றும் ஆங்கிலம்)
- பாஸ்போர்ட் தரவு
- பாலினம்
- தேசியம்
- பிறந்த தேதி
- தாயின் பெயர் (அரபு மற்றும் ஆங்கிலம்)
- தொழில்
- திருமண நிலை
- குடும்ப எண் (UAE குடிமக்கள்)
- நகர எண்
- ஸ்பான்சர் வகை
- ஸ்பான்சர் எண்
- ஸ்பான்சர் பெயர்
- குடியிருப்பு வகை
- குடியிருப்பு எண்
- தனிப்பட்ட புகைப்படம்
- இரண்டு கைரேகைகள்
ICP ஆனது சேவை வழங்குநர்களுக்கு இதற்கான கார்டு ரீடர்களை வழங்குகிறது, எனவே இந்த மின்னணு சிப்பில் இருந்து தனிப்பட்ட தரவைப் படிக்க நிரல்களை உருவாக்க அவர்களுக்கு உதவுகிறது.
மேலும் இரண்டாம் தலைமுறை எமிரேட்ஸ் ஐடிகள் ஒன்பது பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. ஆதலால் இந்த கார்டை போலி அல்லது மோசடியாகப் பயன்படுத்துவது சாத்தியமற்றது என கூறப்பட்டுள்ளது. ICP படி, தற்போதைய பாதுகாப்பு அம்சங்கள் வங்கியில் வழங்கப்படும் கார்டுகள் உட்பட பல கார்டுகளில் பயன்படுத்தப்படும் தரநிலைகளை விட சிறந்து விளங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel