அமீரக செய்திகள்

துபாயில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிதாக அமையவிருக்கும் எமிரேட்டின் மிகவும் நீளமான பீச்..

குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை ஈர்க்கவும் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் துபாயில் மிக நீளமான திறந்தவெளி பொது கடற்கரையை உருவாக்கும் திட்டமான ஜெபல் அலி கடற்கரை மேம்பாட்டு திட்டத்திற்கான மாஸ்டர் பிளான் மற்றும் வடிவமைப்புகளுக்கு தற்பொழுது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் அறிவித்துள்ளார்.

இந்த ஜெபல் அலி கடற்கரை மேம்பாட்டுத் திட்டமானது நீச்சலுக்காக இரண்டு கிலோமீட்டர் திறந்த கடற்கரை, 2.5 கிமீ டைவிங் விளையாட்டுப் பகுதி, பார்க்கும் தளங்கள் கொண்ட நடைபாதை மற்றும் அனைத்து வயதினருக்கும் கடற்கரைக்கு செல்பவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் சேவைப் பகுதிகளைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 6.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜெபல் அலி கடற்கரை 300 ஹெக்டேர் மொத்த பரப்பளவை உள்ளடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கடற்கரைக்கு செல்ல ஒவ்வொரு திசையிலும் இருவழிச் சாலை, 1,000 வாகனங்கள் நிறுத்துமிடம், 80 சைக்கிள் ரேக்குகள், சைக்கிள் ஓட்டும் தடம், 5 கிமீ ஓட்டப் பாதை உள்ளிட்ட ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கடற்கரை இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது பற்றிய ஒரு அறிக்கையில், “ஜெபல் அலி கடற்கரை மேம்பாட்டுத் திட்டம், எமிரேட்டில் உள்ள பொது கடற்கரைகளை 400% உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் புதிய பொது கடற்கரைகளைச் சேர்ப்பதும், தற்போதுள்ள கடற்கரைகளை மேம்படுத்துவதும் அடங்கும். துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் பிளானில் கற்பனை செய்யப்பட்ட புதிய பொழுதுபோக்கு, விளையாட்டு, முதலீட்டு வசதிகளுடன் இது ஒத்துப்போகின்றது” என ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹம்தான் மேலும் கூறுகையில், “உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை செயல்படுத்தவும், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு கடற்கரைகள், திறந்தவெளிகள் மற்றும் பொழுதுபோக்கிற்கு பசுமையான இடங்கள் உட்பட பல நகர்ப்புற விருப்பங்களை வழங்கவும், நகரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அரசாங்கம் உறுதியாக உள்ளது. குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலவாசிகளுக்கு சிறப்பான ஆரோக்கியமான சூழலை வழங்கி, உலகில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக துபாய் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

துபாயின் உள்கட்டமைப்பு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நல்வாழ்வு தூண் ஆணையர் ஜெனரல் மட்டர் அல் தயர் கருத்துப்படி, இந்த திட்டத்தில் நக்கீல் (nakheel) மூலம் உருவாக்கப்படும் 5 கிமீ மணல் கடற்கரை மற்றும் துபாய் நகராட்சியால் உருவாக்கப்படும் 1.6 கிமீ சதுப்புநில கடற்கரை ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் “சதுப்புநில மரங்கள் இருப்பதால், இப்பகுதி ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது, இது பல உயிரினங்களுக்கு வாழ்விடங்களை வழங்குகிறது. இப்பகுதியின் வடிவமைப்பு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பார்வையாளர்களின் அனுபவத்தை செழுமைப்படுத்தவும் உதவுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பகுதிகள்

இந்த கடற்கரையில் மூன்று தனித்தனி இடங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அவற்றில் முதல் இடம், ‘The Pearl’ ஆகும். இது பாம் ஜெபல் அலியின் நுழைவாயிலுக்கு அருகில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக இருக்கும் என்றும், மேலும் இது ஒரு குடும்ப கடற்கரை (family beach), விளையாட்டு நடவடிக்கைகள், நீச்சல் குளம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகளுக்கான விருப்பங்களுடன் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் இங்கு ‘தி பேர்ல்’ பீச் கிளப் மற்றும் பல உணவகங்கள், கஃபேக்கள், கடைகள் மற்றும் மிதக்கும் உணவகத்தையும் (floating restaurant) கொண்டிருக்கும்.

இரண்டாவது தளம், ‘Sanctuary’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஆமைகளுக்கான புகலிடமாகும். இந்த பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது மற்றும் அதே நேரத்தில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு இடமளிக்கிறது.

‘Nest’ என்பது கல்வி முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய பொழுதுபோக்கு மற்றும் கல்வி இலக்கை வழங்கும் மூன்றாவது இடமாகும். சதுப்புநில பகுதிக்குள் அமைந்துள்ள நெஸ்ட், பல்லுயிர், ஆமை மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு திட்டங்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வுக்கான சுற்றுச்சூழல் மையமாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மற்ற திட்டங்கள்

கடந்த ஆண்டு, துபாய் தனது கடற்கரையை 400 சதவீதம் விரிவுபடுத்தும் ஒரு லட்சிய திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் துபாயில் 105 கிமீ பொது கடற்கரைகளை ஆராயலாம். துபாயில் தற்பொழுது எட்டு பொது கடற்கரைகள் உள்ளன: கோர் அல் மம்சார், அல் மம்சார் கார்னிச், ஜுமேரா 1, ஜுமைரா 2, ஜுமேரா 3, உம் சுகீம் 1, உம் சுகீம் 2 மற்றும் ஜெபல் அலி. 2023 இல், இவற்றில் சில கடற்கரைகள் புதுப்பிக்கப்பட்டன

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களில் அல் மம்சார் கடற்கரையின் இருபுறமும் இணைக்கப்படும் ஒரு மிதக்கும் பாலம் முக்கியமானதாகும். இந்த திட்டமானது கடந்த ஜூன் 3 அன்று அறிவிக்கப்பட்டது. 200 மீட்டர் நீளம் கொண்ட மிதக்கும் பாதசாரி பாலம் துபாயில் இதுவே முதல் முறையாகும். நீர் மேற்பரப்பில் கட்டப்படும் மிதக்கும் பாலம் பார்வையாளர்கள் ஈரமாகாமல் நடந்து செல்ல அனுமதிக்கிறது. அல் மம்சார் கடற்கரையுடன் ஜூமேரா 1 கடற்கரையும் மேம்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!