அமீரக செய்திகள்

அமீரகத்தில் க்ரூஸ் கன்ட்ரோலை இழந்த மற்றுமொரு கார்.. மீட்டெடுத்த காவல்துறை.. வெளியான வீடியோ..!!

அபுதாபியில் இருக்கக்கூடிய ஷவாமேக் ஸ்ட்ரீட்டில் ஓட்டுநர் ஒருவர் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த போது, ​​காரின் க்ரூஸ் கன்ட்ரோல் எனப்படும் தானியங்கி வாகன இயக்கம் பழுதாகியுள்ளது. இதனை அறிந்த அபுதாபி காவல்துறையினர் விரைந்து திறமையாக செயல்பட்டு வாகனத்தை மீட்டுள்ளனர். இந்த சம்பவமானது வீடியோவாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதையடுத்து தற்பொழுது வைரலாகி வருகிறது.

அபுதாபியில் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ஷஹாமாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தின் மீட்பு பணியானது கேமராவில் பதிவாக்கப்பட்டுள்ளது. அபுதாபி செக்யூரிட்டி மீடியாவின் தலைவரான லெப்டினன்ட் கர்னல் நாசர் அல் சைதி பின்னர் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதிவேகமாகச் சென்ற காரின் முன் காவல்துறை எவ்வாறு திறமையாக சென்று அந்த நபருக்கு உதவியது என்பதை வீடியோ கிளிப் காட்சிப்படுத்தியுள்ளது.

வீடியோவில் உள்ள நபர் தனக்கு முன்னால் ஒரு போலீஸ் அதிகாரியுடன் தொலைபேசி அழைப்பில் இருந்ததும் அவருக்கு அரபு மொழியில் அறிவுரைகள் வழங்கப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தின் முன் காவல்துறை கார் நின்று, அதைத் தடுக்க முயன்றிருக்கின்றது. இது ஏர்பேக்கைத் தூண்டிவிடக்கூடும் என்று அந்த வாகன ஓட்டி கவலைப்பட்டிருக்கிறார். பின் பயம் இருந்தபோதிலும், அவர் காவல்துறையின் வழிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொண்டு அவர்களை பின்பற்றியுள்ளார்.

ஆனால் காரின் வேகம் குறைவதற்குப் பதிலாக அதிகரித்தபோது நிலைமை மிகவும் மோசமாகி கார் உரிமையாளருக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, போலீஸ் கார் அதிக அழுத்தம் கொடுத்ததாகவும் இதனால் பழுதடைந்த வாகனம் படிப்படியாக வேகத்தைக் குறைத்து இறுதியில் நிறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் கர்னல் அல் சைதி கூறுகையில், காரின் க்ரூஸ் கன்ட்ரோல் செயலிழந்ததை அடுத்து, கார் உரிமையாளர் காவல்துறைக்கு அழைத்து இதனை தெரிவித்ததாகவும், காவல்துறையினர் விரைந்து சென்று நிலைமையை மீட்டெடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக காவல்துறையினர், க்ரூஸ் கன்ட்ரோலை இழந்த காரை மீட்டெடுத்த இந்த சம்பவமானது இரண்டாவது முறையாக நடந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த வாரம் துபாயில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், துபாயின் முக்கிய சாலையான ஷேக் சயீத் சாலையில் ஒரு டிரைவரின் பயணக் கட்டுப்பாடு எதிர்பாராதவிதமாக பழுதடைந்து இதே போல் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!