துபாய்: அல் கைல் சாலையில் காட்சியளிக்கும் இரண்டு புதிய சாலிக் கேட்கள்..!! கட்டணம் எப்போது முதல் வசூலிக்கப்படும்..??
துபாயில் ஏற்கெனவே பல இடங்களில் டோல் கேட்கள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக இரண்டு டோல் கேட்கள் அல் கைல் சாலையில் அமைக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் சாலிக் கேட்களின் எண்ணிக்கையானது எட்டிலிருந்து 10 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு டோல் கேட்களும் அல் கைல் சாலையில் உள்ள பிசினஸ் பே கிராசிங்கிலும், அல் சஃபா சவுத் ஷேக் சயீத் சாலையில் அல் மேதான் ஸ்ட்ரீட் மற்றும் உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட்டிற்கும் இடையே அமைந்துள்ளது.
துபாயின் பிரத்யேக டோல் கேட் ஆபரேட்டரான சாலிக் கம்பெனி PJSC, செவ்வாயன்று வெளியிடப்பட்ட அதன் அரையாண்டு நிதிநிலை அறிக்கையில் புதிய டோல் கேட்கள் இந்த ஆண்டு நவம்பர் இறுதிக்குள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய சாலிக் கேட்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதன்முதலில் போக்குவரத்தை மேம்படுத்துவதையும், துபாயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த ஜனவரியில் புதிய சாலிக் கேட்களுக்கான இடங்கள் “விரிவான போக்குவரத்து இயக்க ஆய்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. துபாயில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் அதிக திறன் கொண்ட மாற்று வழிகளில் சில போக்குவரத்தை மாற்றியமைப்பதன் மூலம் போக்குவரத்து விநியோகத்தை நிர்வகித்தல் மற்றும் நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம்” என்றும் தெரிவித்திருந்தது.
புதிய சாலிக் கேட்கள் போக்குவரத்தை எப்படி எளிதாக்கும்?
இரண்டு புதிய சாலிக் கேட்கள் துபாயின் வழித்தடங்களில் போக்குவரத்தை 42 சதவீதம் வரை குறைக்கும் என்று RTA முன்பு கூறியுள்ளது.
குறிப்பாக, பிசினஸ் பே கிராசிங்கில் உள்ள சாலிக் இதற்கு பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது:
- ஜபெல் அலியிலிருந்து ஷேக் முகமது பின் சயீத் மற்றும் எமிரேட்ஸ் சாலைகளுக்கு போக்குவரத்தை மாற்றியமைத்தல்
- அல் கைல் சாலையின் நெரிசலை 15 சதவீதம் வரை குறைத்தல்
- அல் ரெபாத் ஸ்ட்ரீட்டின் போக்குவரத்து அளவை 16 சதவீதம் வரை குறைத்தல்
- ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்டின் போக்குவரத்து அளவை 5 சதவீதம் குறைத்தல்
- அல் கைல் சாலையின் அல் ரெபாத் மற்றும் ராஸ் அல் கோர் ஸ்ட்ரீட்களுக்கு இடையே உள்ள நெரிசல் நிறைந்த பிரிவில் இரு திசைகளிலும் தினசரி 20,000 மணிநேரம் மொத்தப் பயண நேரத்தைக் குறைத்தல்
இதற்கிடையில், அல் சஃபா சவுத் சாலிக் பங்களிக்கும் பாதைகள்:
- ஷேக் சயீத் சாலையிலிருந்து அல் மேதான் ஸ்ட்ரீட் வரை வலதுபுறம் திரும்பும் போக்குவரத்தை 15 சதவீதம் குறைத்தல்
- அல் மேதான் மற்றும் அல் சஃபா ஸ்ட்ரீட்களில் இருந்து ஷேக் சயீத் சாலை வரையிலான போக்குவரத்து அளவை சுமார் 42 சதவீதம் குறைத்தல்
- ஷேக் சயீத் சாலையில் ஃபைனான்சியல் சென்டர் மற்றும் லதிஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட்களுக்கு இடையே 4 சதவீதம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல்
- ஃபர்ஸ்ட் அல் கைல் சாலை மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட்களின் பயன்பாட்டை 4 சதவீதம் மேம்படுத்துதல்.
சாலிக் எப்படி வேலை செய்கிறது?
தற்போது, துபாய் முழுவதும் எட்டு சாலிக் கேட்கள் செயல்பாட்டில் உள்ளன. அவை அல் மம்சார் நார்த், அல் மம்சார் ஸ்ட்ரீட், அல் கர்ஹூத் பிரிட்ஜ், அல் மக்தூம் பிரிட்ஜ், விமான நிலைய சுரங்கப்பாதை, அல் சஃபா, அல் பர்ஷா மற்றும் ஜெபல் அலி. ஒவ்வொரு முறையும் ஒரு வாகனம் சாலிக் டோல் கேட் வழியாகச் செல்லும் போது, RFID ஆனது காரின் கண்ணாடியில் இணைக்கப்பட்டிருக்கும் சாலிக் ஸ்டிக்கர் குறிச்சொல்லை ஸ்கேன் செய்கிறது, மேலும் வாகன ஓட்டிகளின் ப்ரீபெய்ட் டோல் கணக்கிலிருந்து 4 திர்ஹம்ஸ் தானாகவே கழிக்கப்படும்.
அதை ஆன்லைனில் அல்லது ரீசார்ஜ் கார்டுகள் மூலம் டாப் அப் செய்யலாம். போதுமான பேலன்ஸ் இருப்பை பராமரிக்கத் தவறினால் அல்லது சரியான டேக் இல்லாமல் சாலிக் வழியாகச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, சுமார் 593 மில்லியன் பயணங்கள் சாலிக்கின் டோல் கேட்கள் வழியாக சென்றன. அத்துடன் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, எட்டு டோல் கேட்கள் வழியாக 238.5 மில்லியன் பயணங்கள் சென்றன என்றும், இதன் விளைவாக 1.1 பில்லியன் அரையாண்டு வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தை விட 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
அபுதாபி டோல் கேட்கள்
ஜனவரி 2021 இல் Darb எனும் டோல் கேட் முறை அபுதாபியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. துபாயைப் போலவே, அபுதாபிக்கு செல்லும் முக்கிய பாலங்களில் (அல் மக்தா பாலம், முசாபா பாலம், ஷேக் சயீத் பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பின் சயீத் பாலம்) செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வொரு பயணத்திற்கும் 4 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது.
இருப்பினும், DARB வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலான அதிக போக்குவரத்து உள்ள பீக் ஹவர்ஸில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வார நாட்களில் பீக் ஹவர்ஸ் இல்லாத நேரத்தில் DARB கட்டணங்கள் இல்லை மற்றும் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் DARB கட்டணம் நாள் முழுவதும் இலவசம். துபாயில் உள்ள சாலிக் கேட்களுக்கு விடுமுறை நாட்களிலும் தினமும் 24 மணிநேரமும் கட்டணம் விதிக்கப்படும். அல் மக்தூமில் மட்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் இலவசம் மற்றும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel