அமீரக செய்திகள்

UAE: வேலை தருவதாக கூறி ஏமாற்றினால் இனி 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம்..!! எச்சரிக்கும் அதிகாரிகள்!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வேலை தேடி வரும் நபர்கள் வேலை கிடைத்த பின் விசா மாற்றாமலேயே வேலை புரிய ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அமீரக சட்ட விதிமுறைகளின் படி முறையான வேலை அனுமதி இல்லாமல் பணிபுரிவது குற்றமாகும். இந்நிலையில் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம், விசிட் விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்துவதில் இருந்து முதலாளிகளைத் தடுக்கும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது சமீபத்தில் திருத்தப்பட்ட சட்ட விதிகளின்படி, 100,000 திர்ஹம்ஸ் முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் குற்றங்களில், முறையான அனுமதியின்றி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் அவர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு வேலை வழங்கத் தவறியது உள்ளிட்ட காரணங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக அமீரகத்தில் வேலை அனுமதி இல்லாமல் தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு அபராதம் 50,000 திர்ஹம்ஸ் முதல் 200,000 திர்ஹம் வரை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது திருத்தப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ள 100,000 திர்ஹம்ஸ் முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரையிலான புதிய வரம்பு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தனியார் நிறுவனத்தை சேர்ந்த சில முதலாளிகள் விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் டூரிஸ்ட் பெர்மிட் காலாவதியான பிறகு ரெசிடென்ஸ் விசா மற்றும் பணி அனுமதிகள் தருவதாக உறுதியளித்து வேலை செய்ய வைக்கிறார்கள். இவர்களில் பலருக்கு இந்தக் காலக்கட்டத்தில் செய்யும் வேலைக்கு ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

மேலும் சில நிறுவனங்களில் விசிட் விசாவில் பணிபுரிபவர்கள் வேலை வாய்ப்பின் உத்தரவாதத்துடன் தவறாக நடத்தப்படுவதுடன், அவர்களின் விசிட் விசா காலாவதியானவுடன் வெளியேறும்படி கூறப்படுவதும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. இந்நிலையில் அமீரக அரசின் தற்போதைய முடிவானது இது மாதிரியான முறைகேடுகளை கணிசமாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தனியார் நிறுவன முதலாளிகள் தொழிலாளர் சட்டங்களை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் என கூறப்படுகின்றது.

அமீரகத்தின் தொழிலாளர் சட்டத்தை பொருத்தவரை விசிட் அல்லது சுற்றுலா அனுமதி/விசாவின் கீழ் பணிபுரிவது சட்டவிரோதமானதாகும். மேலும் வெளிநாட்டவர் ஒருவருக்கு வேலை வழங்கப்பட்டால், ஐக்கிய அரபு அமீ்கத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MOHRE) அனுமதி வழங்கப்பட்ட பின்னரே அவர்கள் வேலை செய்ய முடியும். இதனை பின்பற்றாமல் ஒரு நிறுவனம் சட்டத்தை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அது அதிக ஆபத்துகளையும் சட்டரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!