எமிரேட்ஸ் நிறுவனத்தின் புதிய சாதனை.. வெறும் 6 மாதங்களில் 10.4 பில்லியன் திர்ஹம்ஸ் இலாபம்..!!
துபாயை தளமாக கொண்டு இயங்கும் புகழ்பெற்ற எமிரேட்ஸ் குழுமம் கடந்த ஒரு சில வருடங்களாக தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வரும் நிலையில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிதியாண்டிலும் இலாபத்தில் சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் எமிரேட்ஸ் குழுமம் அதன் மிகச்சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024-25 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு 10.4 பில்லியன் திர்ஹம்ஸ் இலாபத்தை பதிவுசெய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலகட்டத்தில் அதன் வருவாய் 70.8 பில்லியன் திர்ஹம்ஸாக இருந்தது என்றும், இது கடந்த ஆண்டு கிடைத்த வருவாயான 67.3 பில்லியன் திர்ஹம்ஸில் இருந்து ஐந்து சதவீதம் அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் எமிரேட்ஸ் நிறுவனம் புரிந்த சாதனை லாபத்தை முறியடித்து இலாபத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
மேலும் 2023 இல் அமீரக இரசால் இயற்றப்பட்ட கார்ப்பரேட் வருமான வரியை, எமிரேட்ஸ் குழுமம் செலுத்தும் முதல் நிதியாண்டு இதுவாகும். எனவே ஒன்பது சதவீத வரிக் கட்டணத்தைக் கணக்கிட்ட பிறகு, குழுவின் வரிக்குப் பிந்தைய லாபம் 9.3 பில்லியன் திர்ஹம்ஸாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறியதாவது: “2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஒரு அற்புதமான முடிவை வழங்குவதற்காக குழு கடந்த ஆண்டு அதன் சாதனை செயல்திறனை முறியடித்துள்ளது. இது வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், வருகை தருவதற்கும், தொடர்பு கொள்வதற்கும், வணிகம் செய்வதற்கும் விருப்பமான நகரமாக செயல்படும் துபாயின் வளர்ச்சிப் பாதையுடன் இணைந்து எங்கள் நிரூபிக்கப்பட்ட வணிக மாதிரியின் ஆற்றலை மீண்டும் விளக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும் “குழுவின் வலுவான லாபம் எங்களின் தொடர்ச்சியான வெற்றிக்குத் தேவையான முதலீடுகளைச் செய்ய உதவுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டு வர பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கிறோம்; வளர்ச்சியை தொடர்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பிற கண்டுபிடிப்பு திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றுடன் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்தியை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கும் எங்கள் ஊழியர்களையும் கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஷேக் அகமது தொடர்ந்து கூறுகையில்: “2024-25 ஆம் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்களின் தேவை வலுவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் எமிரேட்ஸ் நிறுவனத்தில் புதிய விமானங்கள் இணையும் மற்றும் dnata இல் புதிய வசதிகள் ஆன்லைனில் வருவதால் வருவாயை அதிகரிப்பதற்கான எங்கள் திறனை அதிகரிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்
எமிரேட்ஸ் விமான நிறுவனம்
2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எமிரேட்ஸ் ஏர்லைனின் வரிக்கு முந்தைய லாபம் 9.7 பில்லியன் திர்ஹம்ஸாக புதிய சாதனையை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 9.5 பில்லியனாக இருந்தது. அதே நேரத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் வரி செலுத்தியதன் பின் கிடைத்த லாபம் 8.7 பில்லியன் திர்ஹம்ஸாகும்.
ஏர்லைனின் இந்த புதிய சாதனை வருவாய்க்கு, விமான துறையில் தொடர்ந்து அதிகரிக்கும் வலுவான பயணம் மற்றும் ஏர் கார்கோ தேவை உள்ளிட்டவற்றுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பு மற்றும் சேவைகளை வழங்கும் திறன் ஆகியவையே காரணம் என்று கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் விமான நிறுவனத்தின் அதிகரித்த செயல்பாடுகளுக்கு ஏற்ப எமிரேட்ஸின் நேரடி இயக்கச் செலவுகள் (எரிபொருள் உட்பட) ஆறு சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 34 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இந்தாண்டுவிமானத்தின் இயக்கச் செலவில் (32 சதவீதம்) எரிபொருள் மிகப்பெரிய அங்கமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
dnata
விமான நிலைய சேவை வழங்குநரான dnata-வும் 2024-25 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஏனெனில் அது அதன் கார்கோ மற்றும் தரை கையாளுதல் (ground handling), கேட்டரிங் மற்றும் சில்லறை வணிகம் மற்றும் பயணச் சேவைகள் வணிகங்களில் தொடர்ந்து செயல்பாடுகளை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் மற்ற இயக்க வருமானம் உட்பட அதன் வருவாய், 10.4 பில்லியன் திர்ஹம்ஸாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் கிடைத்த 9.3 பில்லியன் திர்ஹம்ஸூடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் dnata க்கான வரிக்கு முந்தைய மொத்த லாபம் 720 மில்லியன் திர்ஹம்ஸாக உள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட ஐந்து சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயத்தில் dnata இன் வரிக்குப் பிந்தைய லாபம் 571 மில்லியன் திர்ஹம்ஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel