ADVERTISEMENT

துபாய்: 6 மாதங்களில் 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய எமிரேட்ஸ்.. தொடர்ந்து புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தகவல்….

Published: 11 Nov 2024, 11:26 AM |
Updated: 11 Nov 2024, 11:34 AM |
Posted By: Menaka

துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனமான எமிரேட்ஸ் குழுமம் 2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் ஆட்சேர்ப்பு இயக்கத்தின் கீழ், அதன் பலதரப்பட்ட  பிரிவுகளில் சுமார் 2,200 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதாவது 2023-24 நிதியாண்டின் இறுதியில் 112,406 ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், 2024-25 முதல் பாதியின் முடிவில் 114,610 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக குழு வெளிப்படுத்தியுள்ளது, இது கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் அதிகமாகும்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் நிதியாண்டை கணக்கிடாமல் கடந்த ஆண்டான 2023இன் முதல் பாதியில் 108,996 ஊழியர்களைப் பணியமர்த்தியிருந்ததை ஒப்பிடுகையில் எமிரேட்ஸ் குழுமத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையானது தற்பொழுது 5,600-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எமிரேட்ஸ் மற்றும் dnata ஆகிய நிறுவனங்கள் தங்களது எதிர்கால தேவைகளை ஆதரிப்பதற்காக இத்தகைய ஆட்சேர்ப்பு இயக்கங்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று எமிரேட்ஸ் குழுமம் அதன் அரையாண்டின் சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவுசெய்ததுடன் 10.4 பில்லியன் திர்ஹம்ஸ் லாபத்தை பதிவுசெய்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பெற்ற சாதனை லாபத்தை இப்போது முறியடித்துள்ளது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் நிறுவனத்தின் புதிய சாதனை.. வெறும் 6 மாதங்களில் 10.4 பில்லியன் திர்ஹம்ஸ் இலாபம்..!!

இது தொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் பேசிய போது, மற்ற திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கிடையில் ஊழியர்களைக் கவனிக்கவும் இந்த இலாபம் மறு முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து ஷேக் அஹமது கூறியதாவது: “குழுவின் வலுவான லாபம் எங்களின் தொடர்ச்சியான வெற்றிக்கு தேவையான முதலீடுகளைச் செய்ய உதவுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டு வர பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கிறோம்; எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்தியை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கும் எங்கள் ஊழியர்களைக் கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த நிதியாண்டில் எமிரேட்ஸ் குழுமம் சாதனை லாபத்தை ஈட்டிய போது, அதன் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்க அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. மேலும், அதன் ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் அவர்களின் சம்பளத்தில் 20 வாரங்கள் மதிப்புள்ள போனஸையும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிலும் எமிரேட்ஸ், ஃப்ளைதுபாய் மற்றும் பிற அமீரகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனங்கள், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, விமானப் போக்குவரத்துத் துறை மிகவும் வலுவாக மீண்டு வந்ததால், பெரிய அளவில் ஆட்சேர்ப்பு இயக்கத்தை மேற்கொண்டன. தற்போது, பெரும்பாலான விமான நிறுவனங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையை எட்டியுள்ளன அல்லது கடந்துவிட்டன என கூறப்பட்டுள்ளது.

மேலும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தொடர்ந்து தனது சேவையை விரிவுபடுத்தி வருவதால் இனி வரும் காலங்களிலும் அதிகளவு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வரக்கூடிய காலங்களில் துபாயை பொறுத்தவரை விமானத்துறையானது மிக முக்கிய பங்கு வகிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த துறையில் வேலை புரிய விரும்பும் நபர்களுக்கு துபாய் ஒரு சிறந்த இலக்காக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel