சவுதி அரேபியாவில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த ‘ரியாத் மெட்ரோ’.. 3.6 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கும் எனத் தகவல்..!!
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அதிகமான பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த ‘ரியாத் மெட்ரோ (Riyath Metro)’ திட்டத்தின் முதல் பகுதியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (டிசம்பர் 1) முதல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இது ரியாத் நகரத்தில் போக்குவரத்திற்கு பெரும்பாலும் காரை நம்பியிருக்கும் மக்களை பொது போக்குவரத்துக்கு மாற்ற உதவும் ஒரு மிகப்பெரிய திட்டமாகும்.
இது தொடர்பாக ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரம் முழுவதும் ஆறு லைன், 176-கிலோமீட்டர் (109 மைல்) நெட்வொர்க்கை முடிக்கும் படிப்படியான அறிமுகத்துடன், டிசம்பர் 1 ஆம் தேதி பொதுமக்களுக்கு மூன்று வழிகள் தற்போது திறக்கப்படும் என்றும், இதன் ஆறு வழித்தடங்களும் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மெட்ரோ நெட்வொர்க் 3.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை அதிகபட்ச திறனில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரியாத் மெட்ரோவானது ஓட்டுநர் இல்லாத முழு தானியங்கி அமைப்பில் செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் சீமென்ஸ், கனடாவின் பாம்பார்டியர் மற்றும் பிரான்சின் அல்ஸ்டாம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட 448 பெட்டிகளுடன் 183 ரயில்கள் சேவைகளை வழங்க உள்ளன, அவை பிரெஞ்சு நிறுவனமான Avant Premiere இன் நவீன மற்றும் ஒருங்கிணைந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிகாரபூர்வ சவூதி பிரஸ் ஏஜென்சி, ரியாத் மெட்ரோ திட்டத்தை “தலைநகரின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பின் முதுகெலும்பு” என்று குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாக முறையாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
சுமார் எட்டு மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான ரியாத், மன்னர் சல்மானின் மகனும் நடைமுறை ஆட்சியாளருமான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ‘விஷன் 2030’ எனும் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பொது போக்குவரத்தை மேம்படுத்த ரியாத் மெட்ரோ தொடங்கப்பட்டது.
அத்துடன், சவுதி அரேபியா முழுவதும் தீம் பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள், சவூதி வரலாற்றைக் காண்பிக்கும் சுற்றுலா இடங்கள் மற்றும் ராஜ்யத்தில் பிராந்திய தலைமையகத்தை நிறுவும் நிறுவனங்களின் அலுவலக கோபுரங்கள் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் எரிபொருள் தேவை வரும் ஆண்டுகளில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. எனவே அதற்கு மாற்றாக உள்நாட்டு பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ‘விஷன் 2030’ என்பதன் கீழ் பல்வேறு திட்டங்களை தற்போது சவுதி அரேபியா செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel