ரமலானின் 27வது இரவில் மட்டும் 105,310 பேர்.. சாதனை படைத்த அபுதாபி கிராண்ட் மசூதி..!!

உலகின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றானதும் மற்றும் அமீரகத்தில் மிகவும் பிரமிக்க வைக்கும் அடையாளங்களில் ஒன்றானதும் ஆன ஷேக் சையத் கிராண்ட் மசூதி (sheikh zayed grand mosque) இந்த ரமலானின் 27வது இரவில், வழிபாட்டாளர்கள் மற்றும் இஃப்தாருக்கு வந்த விருந்தினர்கள் என மொத்தம் 105,310 குடியிருப்பாளர்களை வரவேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அரபு கட்டிடக்கலைக்கு அடையாளமாக விளங்கும் இந்த அபுதாபி கிராண்ட் மசூதி, முஸ்லிம்கள், அமீரக குடியிருப்பாளர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் பார்க்க விரும்பும் அமீரகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் ஜனாதிபதியும், அமீரகத்தின் தந்தை என அழைக்கப்படும் மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களால் கட்டப்பட்ட இந்த மசூதி சுமார் 82 குவிமாடங்களைக் கொண்ட ஒரு கட்டிடக்கலை அற்புதமாகும். மேலும் தினமும் இங்கு 50,000 வழிபாட்டாளர்களை வரவேற்க முடியும்.
இந்த மிகப்பெரிய மசூதியில் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் போது ஆயிரக்கனக்காண வழிபாட்டாளர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ரமலானின் சிறப்பு மிக்க இரவாக கூறப்படும் ‘லைலத் அல் கத்ர் (Laylat Al Qadr)’ இரவைக் குறிக்கும் 27 ஆம் தேதி இரவு மட்டும் மொத்தம் 105,310 பேர் வருகை தந்ததாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த மொத்த எண்ணிக்கையில் 11,483 பேர் இரவு 8 மணிக்கு மேல் நடைபெறும் தாராவீஹ் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர். அடுத்ததாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடைபெற்ற கியாமுல் லைல் தொழுகையில் 61,050 பேர் பங்கேற்றுள்ளனர். இது தவிர அன்று மாலையில் இஃப்தாரின் போது 27,000 க்கும் மேற்பட்டோர் மசூதியில் நோன்பை துறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
புனித ரமாலன் மாதத்தில் மசூதிக்கு வரும் வழிபாட்டாளர்களின் வருகையை எளிதாக்கும் வகையில், அபுதாபி மொபிலிட்டி ரமலானின் கடந்த 10 நாட்களில் இலவச பேருந்துகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட டாக்ஸிகளை இயக்கி வருகிறது. அபுதாபியின் அடையாள சின்னமான இந்த மசூதி, அதன் ஆன்மீக மற்றும் கட்டிடக்கலை அழகை அனுபவிக்க உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel