அமீரக தலைநகரான அபுதாபிக்கு வரும் சர்வதேச பார்வையாளர்கள் அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் இலவச சிம் கார்டை பெறுவார்கள் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினரின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, அபுதாபி விமான நிலையங்களும் தொலைத்தொடர்பு நிறுவனமான e& நிறுவனமும் ஒன்றிணைந்து பார்வையாளர்களுக்கு 10GB டேட்டா கொண்ட சிம் கார்டுகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் இந்த இலவச 10 GB டேட்டாவை அறிமுகப்படுத்துவது பயணிகளுக்கு உடனடி இணைப்பை அணுக உதவுகிறது என்றும், இதனால் மேப், பயணம் செய்தல், பணம் செலுத்துதல், தொடர்பு கொள்ளுதல் மற்றும் அபுதாபி பாஸ் போன்ற இலக்கு வழிகாட்டிகள் போன்ற அத்தியாவசிய ஆன்லைன் சேவைகளை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமான மையங்களில் ஒன்றாகும், இது 30க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பயணிகளை இணைக்கிறது. அத்துடன் இதன் புதிய டெர்மினல் கடந்த செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி 23.9 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இது உலகளாவிய இலக்கமாக அபுதாபியின் முக்கியத்துவத்திற்கு சான்றாகும்.
இது குறித்து தெரிவிக்கையில் “அபுதாபி விமான நிலையங்களில், எங்கள் முன்னுரிமை விமான நிலைய அனுபவங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதும், ஒவ்வொரு பயணியும் அபுதாபிக்கு வந்தவுடன் வரவேற்கப்படுவதை உறுதி செய்வதும் ஆகும்” என்று அபுதாபி விமான நிலையங்களின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலினா சோர்லினி கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த புதிய சேவை சையத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்தவுடன் வசதியையும் எளிமையையும் அனுபவிப்பதை உறுதி செய்யும் என்று e& நிறுவன அமீரக தலைமை நிர்வாக அதிகாரி மசூத் எம். ஷெரிப் மஹ்மூத் கூறியுள்ளார். மேலும் “சையத் சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து, தலைநகரில் தரையிறங்கிய தருணத்திலிருந்து பார்வையாளர்கள் வீட்டில் இருப்பது போல் உணர உதவும் வேகமான, டிஜிட்டல் அனுபவத்துடன் அவர்களின் வருகையை எளிதாக்குகிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
இது போன்ற சேவை துபாயில் ஏற்கெனவே கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. அபுதாபி அறிவித்ததை போன்றே துபாய்க்கு வரும் சர்வதேச சுற்றுலாவாசிகள் 10 GB டேட்டா கொண்ட இலவச சிம் கார்டை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel