தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, துபாய் எமிரேட், அஜ்மான் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
எனவே பயணிகள் இந்த வழித்தடங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும், சேவை மீண்டும் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அமீரகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் கடுமையான வானிலையின் போது துபாயின் RTA முன்னெச்சரிக்கை செயல்பாடுகளை துரிதப்படுத்தி வருகின்றது. தொடர்ந்து மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல், ஆலங்கட்டி மழை, பலத்த காற்று, வீசும் தூசி மற்றும் கடல் சீற்றம் பற்றிய தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, RTA 24 மணி நேர கண்காணிப்பு, களக் குழுக்கள் மற்றும் விரைவான மீட்புப் பிரிவுகளை நிறுத்தியுள்ளது. அவசர மற்றும் நெருக்கடி குழுக்கள் கட்டளை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சம்பவங்களை நிர்வகித்து வருகின்றன.
அத்துடன் மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும் தொடர்ச்சியான செயல்பாட்டுத் தயார்நிலையைப் பராமரிக்கவும் RTA தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கனமழை, பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் அவ்வப்போது ஏற்படும் ஆலங்கட்டி மழை காரணமாக, சாலைப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel