அமீரக செய்திகள்

துபாயில் திறக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான மிகப்பெரிய உட்புற சந்தை..!! வாடிக்கையாளர்களின் வசதிக்காக துபாய் முனிசிபாலிட்டியின் புதிய திட்டம்..!!

துபாயில் புதிதாக பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான மிகப்பெரிய உட்புற சந்தையை துபாய் முனிசிபாலிட்டி திறந்துள்ளது. அல் அவீரில் உள்ள துபாய் பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த உட்புற சந்தையை அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், உட்புற பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் இதுவே மிகப்பெரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ப்ளூம் மார்க்கெட் (Bloom Market) எனும் பெயரில் சுமார் 66,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த உட்புற சந்தையில், மற்ற மார்க்கெட்டுகளில் கிடைக்காத பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் இது தனித்துவமான ஷாப்பிங் மையமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சந்தையில் ஆர்கானிக் பொருட்களுக்கான பிரிவும் இருப்பதாக முனிசிபாலிட்டி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் சந்தை இயக்குநர் முகமது ஃபரைதூனி அவர்கள் பேசுகையில், இங்கு உள்ளூர் பண்ணைகளில் இருந்து பெறப்படும் புதிய தயாரிப்புகளும் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சில்லறை விற்பனை அங்காடிகளுடன் ஒப்பிடுகையில் சந்தையில் விலைகள் மலிவாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏனெனில், இந்த சந்தையில் சில்லறை பல்பொருள் அங்காடிகளைப் போலல்லாமல், நேரடியாக காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், வெளிப்புற சந்தைக்கு நிகரான விலையை பராமரிக்குமாறு வர்த்தகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேம்பாட்டு நடவடிக்கைகள்:

இந்த காய்கறி மற்றும் பழங்கள் சந்தை தொடர்பாக மேலும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று டெலிவரி சேவையாகும். அதாவது சந்தையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய ஒரு ஸ்மார்ட் ஆப்-ஐ உருவாக்கும் முயற்சியில் முனிசிபாலிட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்தை பேரீச்சம்பழம், முட்டை மற்றும் கோழிப்பண்ணை போன்ற பல்வேறு வகையான பொருட்களை கூடுதலாக சேர்ப்பதன் மூலம், பெரிதாக்கப்படும் என்று ஃபரைடூனி கூறியுள்ளார். இத்தகைய விரிவான ப்ளூம் சந்தையை பெரும்பாலான விற்பனையாளர்கள் வரவேற்றுள்ளனர் என்றும் ஃபரைடூனி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தையின் முதல் தளத்தில் குத்தகைக்கு விடப்பட்ட பகுதி முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், “எங்களிடம் வியாபாரிகள் உள்ளனர், அவர்கள் வெளியில் கடைகளை வைத்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் தற்பொழுது உட்புற சந்தைக்கு தங்கள் கடைகளை மாற்றுகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் குத்தகைக்கு விடக்கூடிய முதல் தளத்தில் மற்ற வசதிகளுடன் கூடிய மூன்று உணவகங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, 470 இடங்கள் கொண்ட அடித்தள கார் பார்க்கிங் பகுதி மற்றும் லாரிகளுக்கான 200 பார்க்கிங் பகுதிகளும், 760 கியோஸ்க்களும் இந்த சந்தையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!