அமீரக செய்திகள்

அமீரக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: அபுதாபியில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ரேடார்..!!

சாலைகளில் பாதசாரிகள் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் நிறுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய ரேடார்கள் அபுதாபியின் பல்வேறு சாலைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட புதிய வீடியோவில், அபுதாபியில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்காக போடப்பட்ட இடங்களில் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் செய்யும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் ரேடார் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, ‘hather’ (கவனமாக இருங்கள்) என பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் சிஸ்டம், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க ஓட்டுநர்களை எச்சரிப்பது மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் சாலையை கடப்பதற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு, அபுதாபியில் உள்ள பள்ளிகள் மற்றும் வணிக மையங்களுக்கு அருகில் புதிய ஸ்மார்ட் சிஸ்டம் வைப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ரேடார்கள் சோதனை கட்டத்தில் பல விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து, குறிப்பிட்ட பகுதிகளில் பாதசாரிகள் சாலைகளைக் கடக்கும்போது வாகனங்களை முழுமையாக நிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தும் செய்திகளை மட்டுமே அனுப்பியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன் பாதசாரிகளுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு போக்குவரத்து கருப்பு புள்ளிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் கூறுகையில், “ஓட்டுநர்கள் போக்குவரத்து சிக்னல்களுக்கு இணங்க வாகனங்களை ஓட்ட வேண்டும் மற்றும் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ஓட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சாலைகளைக் கடக்கும்போது நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தவும், போக்குவரத்து ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் சந்திப்புகளில் பாதசாரிகளுக்கான சிக்னல்களை பின்பற்றவும் அதிகாரிகள் பாதசாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பாதசாரிகளுக்கு நியமிக்கப்படாத பகுதிகளில் இருந்து சாலையை கடப்பது விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும், இந்த விதிமீறல் புரிபவருக்கு அபுதாபியில் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அபுதாபி காவல்துறை, பாதசாரிகளுக்காக போடப்பட்டிருக்கும் பிரத்யேக நடைபாதையில் அல்லாமல் சாலையின் குறுக்கே செல்லும் பாதசாரிகள், மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் நிற்காமல் செல்லும் ஓட்டுநர்களைக் கண்டறிய புதிய ஸ்மார்ட் ரேடார்களை அறிமுகப்படுத்தியது.

கடந்த ஆண்டு, அபுதாபியில் 48,000 பாதசாரிகளுக்கு இந்த விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!