அமீரக செய்திகள்

அமீரகம்: 9வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது இந்திய சிறுமி மரணம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்புக் கட்டிடங்களில் இருக்கும் பால்கனி மற்றும் ஜன்னல்களில் இருந்து குழந்தைகள் தவறி விழும் சம்பவமானது ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இதனையொட்டி அமீரக காவல்துறையும் அதிகாரிகளும் இது தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு குழந்தையானது அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளது. துபாயின் அல் குசைஸில் உள்ள அல் புஸ்தான் மையத்திற்கு அருகில் உள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து 5 வயதான இந்திய குழந்தை ஒன்று தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் குழந்தை இறந்ததாக துபாய் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.  

டிசம்பர் 10 ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் குடும்பத்தின் அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது மாடியில் இருந்து திறக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய ஜன்னல் வழியாக இந்த குழந்தை விழுந்தது என கூறப்பட்டுள்ளது.

குழந்தை விழுந்த ஜன்னல் 

இந்த சம்பவம் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில் “இது மிகவும் சிறிய ஜன்னல். இதிலிருந்து ஒரு குழந்தை விழுந்ததை நம்ப முடியவில்லை. இந்த தகவலை அறிந்ததும் மிகவும் கஷ்டமாக உள்ளது. அந்த பெண் குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டே சுறுசுறுப்பாக இருக்கும் இனிமையான குழந்தை” என்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ ஆவண செயல்முறையை முடித்த பின்னர், குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினர் தங்கள் சொந்த நாட்டிற்கு விமானத்தில் எடுத்துச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதன் காரணமாக குழந்தைகளை பால்கனிக்கு அருகிலோ அல்லது  ஜன்னல் பக்கத்திலோ சென்று விளையாட அனுமதிக்காமல் ஒருவேளை அந்த பகுதிக்கு அருகே குழந்தை செல்லுமாயின் முழு கவனத்தையும் குழந்தை மீதே வைத்திருக்குமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!