அமீரக செய்திகள்

துபாய்: இலக்கை எட்டிய ‘ஒரு பில்லியன் உணவுகள்’ பிரச்சாரம்.. 400 மில்லியன் திர்ஹம்ஸை தனிப்பட்ட நன்கொடையாக வழங்கிய துபாய் ஆட்சியாளர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பாதிக்கப்படக்கூடிய 50 நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட “ஒரு பில்லியன் உணவு” பிரச்சாரத்திற்காக 400 மில்லியன் உணவை அதாவது
400 மில்லியன் திர்ஹம்ஸை தனது தனிப்பட்ட நன்கொடை மூலம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது அவர்களால் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட இந்த ஒரு பில்லியன் உணவு பிரச்சாரத்திற்கு இது வரையிலும் பல்வேறு தரப்பிலிருந்து 600 மில்லியன் உணவு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 400 மில்லியன் உணவை ஷேக் முகமது அவர்கள் வழங்குவதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை குறித்து ஷேக் முகமது பின் ராஷித் அவர்கள் நேற்று புதன்கிழமை வெளியிட்டிருந்த ட்வீட்டில் “இன்று, 320,000 தனிநபர்கள், நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் பிற நிறுவனங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600 மில்லியன் உணவுகளை சேகரித்த பிறகு, ‘ஒரு பில்லியன் உணவுகள்’ பிரச்சாரத்தை நாங்கள் முடிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, “ஒரு பில்லியன் உணவுகள் பிரச்சாரம் தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரக மக்களின் உண்மையான மதிப்புகளையும், மற்றவர்களின் போராட்டங்களில் அவர்களின் அனுதாபத்தையும் பிரதிபலிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய இந்த மனிதாபிமான உணவு இயக்கத்திற்கு பங்களித்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் தனது நன்றியையும் ஷேக் முகமது பின் ராஷித் அவர்கள் ட்விட்டரின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதே போன்று கடந்த ஆண்டும் ஷேக் முகமது அவர்கள் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவும் வகையில் “100 மில்லியன் உணவுகள்” எனும் பிரச்சாரத்தை தொடங்கி அதன் மூலம் 220 மில்லியன் உணவுகள் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் தொழில் புரியும் வணிக சமூகத்தின் உறுப்பினர்கள், அரசு துறைகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் நன்கொடையாளர்கள் போன்ற பலரும் இந்த உன்னத நோக்கத்திற்காக தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர். மேலும் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்கும் விதமாக துபாய் மற்றும் அபுதாபியில் ஆடம்பர கார் நம்பர் பிளேட் மற்றும் ஃபேன்ஸி மொபைல் நம்பர் ஏலமும் மோஸ்ட் நோபல் நம்பர்ஸ் அறக்கட்டளை வாயிலாக நடத்தப்பட்டது.

துபாய் ஆட்சியாளரின் இந்த ஒரு பில்லியன் உணவுகள் திட்டமானது, அமீரகத்தில் உள்ள நிறுவனங்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் 320,868 தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள், அபுதாபியில் மோஸ்ட் நோபல் நம்பர்ஸ் அறக்கட்டளை ஏலத்தில் இருந்து பெறப்பட்ட 111 மில்லியன் திர்ஹம்ஸ் மற்றும் துபாயில் நடந்த மோஸ்ட் நோபல் நம்பர்ஸ் அறக்கட்டளை ஏலத்தில் இருந்து பெறப்பட்ட 53 மில்லியன் திர்ஹம்ஸ் போன்றவற்றால் 600 மில்லியன் திர்ஹம்ஸ்களும், ஷேக் முகமது அவர்களின் தனிப்பட்ட நன்கொடையாக 400 மில்லியன் திர்ஹம்ஸ்களும் வழங்கப்பட்டு இந்த “ஒரு பில்லியன் உணவுகள்” பிரச்சாரம் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!