அமீரக செய்திகள்

துபாயில் சாலிக் கேட்களை கட்டணமின்றி கடக்க முடியுமா? சாலிக் கேட்களைத் தவிர்ப்பது எப்படி? முழுவிபரங்களும் இங்கே…

துபாயில் இருக்கக்கூடிய சாலிக் கேட்களைப் பார்த்ததும் தனது வாகனத்தைத் திருப்பிக் கொண்டு செல்லக்கூடிய நபரா நீங்கள்? அதற்குப் பதிலாக கட்டணமில்லா பாதை ஏதேனும் உள்ளதா அல்லது சாலிக் கேட்களில் கட்டணமில்லாத நாட்கள் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகமா..?? இது போன்ற சந்தேகங்களுக்கான விளக்கங்களை கீழே காணலாம்.

துபாயில் உள்ள சுங்கச்சாவடி ஆபரேட்டரான சாலிக் கருத்துப்படி, சாலிக் கேட்களில் கட்டணமில்லா நாட்கள் என்று எதுவும் கிடையாது, அது வார இறுதி நாளாக இருந்தாலும் சரி அல்லது பொது விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி.

இருப்பினும், நீங்கள் கட்டணம் செலுத்தாமல் ஒரு சில சாலிக் கேட்களைக் கடக்க முடியும். அவ்வாறு கட்டணமின்றி கேட்களைக் கடக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போது சாலிக் கேட் இலவசம்?

துபாயில் வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் சாலிக் இலவசம் இல்லை என்றாலும், மாற்றுப் பாதையான ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் வாகன ஓட்டிகளுக்கு மூடப்பட்டிருக்கும் போது, துபாய் க்ரீக்கில் அமைந்துள்ள அல் மக்தூம் பாலத்தின் டோல் கேட் வழியாக நாளின் சில நேரங்களில் இலவசமாக செல்லலாம்.

அல் மக்தூம் பாலம் டோல் கேட்டிற்கான இலவச நேரங்கள்:

  • வார நாட்களில், அல் மக்தூம் பாலத்தின் டோல் கேட் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இலவசம்.
  • வார இறுதியில், சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை கட்டணமின்றி நுழையலாம்.

மம்சார் டோல் கேட்:

அல் இத்திஹாத் சாலையில் உள்ள மம்சார் டோல் கேட்டில் அல் மம்சார் நார்த் மற்றும் அல் மம்சார் சவுத் என இரண்டு கேட்கள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு கேட்களிலும் ஒரே திசையில் சென்றால், ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

துபாயில் சாலிக் கேட்கள்:

  1. அல் சஃபா (ஷேக் சையத் சாலை)
  2. அல் பர்ஷா (ஷேக் சையத் சாலை)
  3. அல் கர்ஹூத் பாலம் (ஷேக் ரஷித் சாலை)
  4. அல் மக்தூம் பாலம் (உம்ம் ஹுரைர் சாலை)
  5. அல் மம்சார் நார்த் (அல் இத்திஹாத் சாலை)
  6. அல் மம்சார் சவுத் (அல் இத்திஹாத் சாலை)
  7. விமான நிலைய சுரங்கப்பாதை (பெய்ரூட் ஸ்ட்ரீட்)
  8. ஜெபல் அலி (ஷேக் சையத் சாலை)

சாலிக் கேட்களைத் தவிர்த்து வேறு பாதைகளில் பயணிக்க முடியுமா?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) உருவாக்கியுள்ள ‘RTA Smart Drive’ என்பது இலவச GPS நேவிகேஷன் ஆப் ஆகும். இதில் உள்ள ஒரு சிறப்பம்சத்தின் மூலம், வாகன ஓட்டிகள் தங்கள் பாதையைத் திட்டமிடும்போது சாலிக் கேட் உள்ள சாலைகளைத் தவிர்க்கலாம்.

ஸ்மார்ட் ஆப் வழங்கும் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது?

  1. உங்கள் மொபைலில் ‘RTA Smart Drive’ செயலியை டவுன்லோட் செய்து, உள்நுழையவும்.
  2. மொபைல் திரையின் கீழே உள்ள மெனு பட்டியில் இருந்து நான்காவது ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அதில் ‘Go to Search’ என்பதைத் தேர்வு செய்து, ‘Navigate to’ என்ற பட்டனைத் தட்டவும்.
  4. இப்போது, உங்கள் மொபைல் திரையின் வலது பக்கத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானைத் தட்டி, ‘Avoid on Route’ என்பதன் கீழ் உள்ள ‘Toll Roads’ என்பதைக் கிளிக் செய்யவும். இந்த சேவையில் உங்கள் பாதையில் நெடுஞ்சாலைகளைத் தவிர்க்கவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது.
  5. இறுதியாக, ‘OK’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, ‘RTA Smart Drive’ உங்களின் விருப்பப் பாதையை அமைக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!