அமீரக செய்திகள்

துபாய்: பேருந்து, டாக்ஸியில் பயணிப்பதற்கான நேரத்தை குறைக்க RTA-வின் சூப்பர் திட்டம்..!! பயணிகள் மகிழ்ச்சி..!!

துபாயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வண்ணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு தனி பேருந்து மற்றும் டாக்ஸி பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக தற்பொழுது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பேருந்தில் பயணிக்கும் மக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த கார்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் ஒரு பெரிய இலக்கின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.

துபாயில் இருக்கக்கூடிய ஷேக் கலீஃபா பின் சயீத் ஸ்ட்ரீட், ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா ஸ்ட்ரீட், டிசம்பர் 2nd ஸ்ட்ரீட், அம்மன் ஸ்ட்ரீட், அல் சத்வா ரோடு, அல் நஹ்தா ஸ்ட்ரீட், உமர் பின் அல் கத்தாப் ஸ்ட்ரீட் மற்றும் நைஃப் ஸ்ட்ரீட் ஆகிய எட்டு முக்கிய தெருக்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த பிரத்யேக பாதைகள் டிசம்பர் செகண்ட் ஸ்ட்ரீட் (december 2nd street) போன்ற பரபரப்பான சாலைகளில் பேருந்து பயனாளர்களின் பயண நேரத்தை கிட்டத்தட்ட பாதியாக குறைக்கும் என்று RTA தெரிவித்துள்ளது.

“பிரத்யேக பேருந்து பாதைகளின் நோக்கத்தை விரிவுபடுத்துவது சராசரி பேருந்து வேகத்தை அதிகரிக்கிறது மற்றும் பீக் ஹவர்ஸ் என சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமான நேரங்களின் பயண நேரத்தை 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கிறது” என்று RTA இன் டைரக்டர் ஜெனரல் மட்டர் அல் தாயர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “இந்த திட்டம் சில தெருக்களில் 2030 ஆம் ஆண்டளவில் பொதுப் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரிப்பதற்கும், பயண நேரம் மிச்சப்படுத்தப்படுவதால் கூடுதல் பேருந்துகளின் தேவைகளைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நகரத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான RTA-வின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும், மேற்கு நாடுகளில் உள்ள வெகுஜனப் போக்குவரத்துக் கொள்கைகளுக்கு ஏற்பவும், தனியார் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் இது இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின்படி அமைக்கப்படும் பாதைகள் சிவப்பு நிறத்தில் தெளிவாகக் குறிக்கப்படும் என்றும், அவை பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திட்டம் டிசம்பர் செகண்ட் ஸ்ட்ரீட்டில் 44 சதவீதமும், ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா ஸ்ட்ரீட் மற்றும் அம்மன் ஸ்ட்ரீட்டில் 39 சதவீதமும், உமர் பின் அல் கத்தாப் ஸ்ட்ரீட், ஷேக் கலீஃபா பின் சயீத் ஸ்ட்ரீட், அல் நஹ்தா ஸ்ட்ரீட் மற்றும் அல் சத்வா சாலைகளில் 28 முதல் 18 சதவீதமும் பேருந்துகளில் பயணிகள் செலவிடும் நேரத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2023 மற்றும் 2027 க்கு இடையில் 37 கிமீ பிரத்யேக பாதைகளை சேர்க்கும் பணி நடைபெறும் என்றும், இது போன்ற பாதைகளின் மொத்த நீளம் 48.6 கிமீ ஆகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட், நைஃப் ஸ்ட்ரீட் மற்றும் குபைபா ஸ்ட்ரீட் போன்ற துபாயின் பல நெரிசலான சாலைகள் மற்றும் சந்திப்புகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

RTA-வின் இந்த அறிவிப்பால் தினசரி பொது போக்குவரத்தை நம்பி இருக்கும் துபாய்வாசிகள் பேருந்து, டாக்ஸி பயணத்திலே மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவது விரைவில் நீங்கும் என எண்ணி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!