அமீரக செய்திகள்

துபாய்: பயண நேரத்தை 104ல் இருந்து 16 நிமிடங்களாக குறைக்கும் ‘அல் சிந்தகா திட்டம்’..!! 45% நிறைவடைந்ததாக RTA அறிவிப்பு..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டப் பணிகள் தற்போது 45 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக RTA தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது, தற்போது RTA ஆல் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். ஷேக் ரஷீத் சாலை, அல் மினா சாலை, அல் கலீஜ் தெரு மற்றும் கெய்ரோ தெரு வழியாக 13 கிமீ நீளமுள்ள 15 சந்திப்புகளின் கட்டுமானத்தை உள்ளடக்கி ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

மொத்தம் 5.3 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த சாலை மேம்பாட்டுத் திட்டம், மொத்தம் 3.1 கிமீ நீளமுள்ள மூன்று புதிய பாலங்களை நிர்மாணிப்பதன் மூலம், வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 88 நிமிடங்கள் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது, தேரா, பர்துபாய் உட்பட எமிரேட்டில் வசிக்கும் சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு சேவை செய்யும் இந்த மேம்பாட்டுத் திட்டமானது, 2030 க்குள் பயண நேரத்தை 104 நிமிடங்களிலிருந்து 16 நிமிடங்களாக குறைக்கும் என்று RTA தெரிவித்துள்ளது. RTAவின் இந்த மிகப்பெரிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் பல முக்கிய கட்டங்கள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டு தற்போது செயல்பாட்டிலும் உள்ளன.

* தி இன்ஃபினிட்டி பிரிட்ஜ்: இந்த புதிய பாலம் ஒவ்வொரு திசையிலும் ஆறு பாதைகள் மற்றும் ஒரு கவர்ச்சிகரமான வளைவுடன் கூடிய அமைப்பைக் கொண்டுள்ளது, இது அழகிய பயண அனுபவத்தை குடியிருப்பாளர்களுக்கு உறுதியளிக்கிறது.

* துபாய் ஐலேண்ட்ஸ்க்கு அணுகலை வழங்கும் ஐந்து பாலங்கள்: இந்த புதிய பாலங்கள் துபாய் ஐலண்ட்ஸில் இருந்து மென்மையான நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை வழங்குகின்றன.

* ஃபால்கன் இன்டர்சேஞ்ச் மேம்பாட்டுத் திட்டம்: இந்த திட்டத்தில் ஒரு பெரிய போக்குவரத்து தடையை அகற்ற மூன்று பாலங்கள் மற்றும் ஒரு சுரங்கப்பாதை கட்டப்பட்டது.

* அல் கலீஜ் பாலம்: அல் கலீஜ் தெருவில் பர் துபாய் நோக்கி மூன்று பாதைகள் கொண்ட ஒரு முக்கிய பாலமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நான்காம் கட்டம் உள்ளடக்கியவை:

>> 1.3கிமீ நீளமுள்ள பாலம், ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகள், ஷேக் ரஷீத் மற்றும் பால்கன் சந்திப்பை இணைக்கும். இந்த பாலம் இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,800 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

>> மூன்று பாதைகள் கொண்ட மற்றொரு 780 மீ நீளமுள்ள பாலம் பால்கன் சந்திப்பிலிருந்து அல் வாஸ்ல் சாலைக்கு வரும் போக்குவரத்திற்கு சேவை செய்யும், இதனால் ஒரு மணி நேரத்திற்கு 5,400 வாகனங்கள் வரை செல்ல முடியும்.

>> 985 மீ நீளமுள்ள இருவழிப் பாலம் ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது, இது பால்கன் குறுக்குவெட்டு திசையில், ஜுமேரா தெருவிலிருந்து அல் மினா தெருவுக்குச் செல்லும் போக்குவரத்தை இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது.

இரண்டு புதிய பாதசாரிகள் மற்றும் சைக்கிள் பாலங்கள்

மேற்கூறியவற்றுடன் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் டிராக்குகள் ஆகியவற்றையும் இத்திட்டம் உள்ளடகியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஷேக் ரஷீத் சாலை மற்றும் அல் மினா தெருவில் இரண்டு பாதசாரி பாலங்கள் இருக்கும்.

RTAவின் மற்ற மேம்பாடுகள்:

4.8 கிமீ நீளமுள்ள சாலைகளை அமைப்பது, ஜுமைரா தெரு, அல் மினா தெரு மற்றும் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா தெரு ஆகிய இடங்களில் மேற்பரப்பு சந்திப்புகளை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கும். கூடுதலாக, சாலைகளில் தெரு விளக்குகள், போக்குவரத்து அமைப்புகள், மழைநீர் வடிகால் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் அமைப்பது  ஆகியவையும் இந்த பணிகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!