அமீரக செய்திகள்

துபாய் கடற்கரைகளை தூய்மைப்படுத்த களமிறங்கியுள்ள பணியாளர் குழு!! துபாயின் அழகைப் பரமாரிக்க முனிசிபாலிட்டி தீவிர முயற்சி…!!

துபாயின் பொது கடற்கரைகளை சுத்தம் செய்ய 72 துப்புரவு பணியாளர்களைக் கொண்ட குழுவை துபாய் முனிசிபாலிட்டி களமிறக்கியுள்ளது. இந்த குழுவானது கடற்கரைகளை சுத்தம் செய்ய 24 மணி நேரமும் பணியாற்றும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த குழுவை மேற்பார்வையிட 12 பணியாளர்களை நியமித்து துபாயின் அழகு, நிலைத்தன்மை மற்றும் அழகியல் ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக துபாய் முனிசிபாலிட்டி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இது துபாயைப் பார்ப்பதற்கே அழகான நகரமாகவும், உலகின் முன்னோடி நகரங்களில் ஒன்றாகவும் மாற்ற, சுமார் 19 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள துபாயின் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதுமட்டுமின்றி, இந்த குழு 13 தற்கால தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்வதாகவும், இதன்மூலம், தகவல் தொடர்பு மற்றும் அவசரநிலைகளுக்கான உடனடி பதிலை விரைவுபடுத்தலாம் என்றும் துபாய் முனிசிபாலிட்டியின் கழிவு செயல்பாட்டுத் துறையின் செயல் இயக்குனர் சையத் அப்துல் ரஹீம் சஃபர் அவர்கள் கூறியுள்ளார்.

DM வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஒரு நாளைக்கு மூன்று வேலை ஷிஃப்டுகளாக வேலை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, தேரா மற்றும் பர் துபாயைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள் 48 தொழிலாளர்களால் பராமரிக்கப்படுகின்றன. அதுபோல, அல் மம்சார் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தேரா மற்றும் பர் துபாய் கடற்கரைகளுக்கு 216 கழிவுகளை சேகரிக்கும் வசதிகளை முனிசிபாலிட்டி வழங்கியுள்ளது. இவையனைத்தும் பார்வையாளர்களின் பார்வைக்கு எட்டும் வகையில் 50 மீட்டர் இடைவெளியில் நிறுவப்படும் என்று சஃபர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சமீபத்தில் இரவு நேர குளியலுக்கு  அனுமதிக்கப்பட்ட ஜுமைரா 2, ஜுமைரா 3, மற்றும் உம் சுகீம் 1 ஆகிய கடற்கரைகளில் துப்புரவு சேவைகளை வழங்குவதையும் களக் குழுக்கள் பின்தொடர்வதாகக் கூறியுள்ளார்.

கூடுதலாக, துபாய் முனிசிபாலிட்டி கடற்கரைகளில் எப்பொழுதும் அனைத்து அவசரகால நிகழ்வுகளையும் கையாளவும், அவசரநிலை மற்றும் கழிவு மேலாண்மை மற்றும் துப்புரவு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை கையாளவும் ஒரு குழுவை நிறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 2,165 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் பங்கேற்புடன் சமூக தன்னார்வ நிகழ்வுகளுக்காக 63 நடவடிக்கைகளை முனிசிபாலிட்டி மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!