அமீரக செய்திகள்

UAE ஏர்போர்ட்ஸ் சாதனை: 2023இல் 134 மில்லியன் பயணிகளை வரவேற்றுள்ளதாக தகவல்….

UAE ஏர்போர்ட்ஸ் கடந்த ஆண்டான 2023இல் சுமார் 134 மில்லியன் பயணிகளை வரவேற்றுள்ளதாகவும், தொடர்ந்து நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 140 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (General Civil Aviation Authority -GCAA) இயக்குநர் ஜெனரல் சைஃப் முகமது அல் சுவைதி அவர்கள் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி ஊடகங்களுக்கு அல் சுவைதி அளித்த அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் UAE ஏர்போர்ட்ஸ் ஏறத்தாழ 38 மில்லியன் வருகைகள், 37.805 மில்லியன் புறப்பாடுகள் மற்றும் 58.328 மில்லியன் போக்குவரத்துப் பயணிகளைப் பதிவு செய்துள்ளதாக எடுத்துரைத்துள்ளார்.

மேலும், அமீரக விமானப் போக்குவரத்துத் துறையின் வலிமை மற்றும் போட்டித்தன்மையே இந்த சாதனைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைநகர் அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் A திறப்பு விழா மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் விரிவாக்கப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இந்த மேம்பாடுகள் அமீரக விமான நிறுவனங்களை பல்வேறு இடங்களுக்கு அதிக விமானங்களை இயக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசுகையில், தேசிய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 521 விமானங்கள் மற்றும் நாட்டில் மொத்தம் 924 பதிவு செய்யப்பட்ட விமானங்கள் இருப்பதாக அமீரகத்தின் வலுவான விமானப் போக்குவரத்துத் துறையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இது தவிர, ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான பராமரிப்பு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சிவில் விமான சேவையை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதிகள் இருப்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இதற்கிடையில், அமெச்சூர்களுக்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) தொடர்பாக, 22,000 க்கும் அதிகமானோர் GCAA இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றின் செயல்பாடு மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அல் சுவைதி குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக, அடுத்த பத்து வருடங்களுக்குள் ஷேக் சையத் விமான நேவிகேசன் மையத்தில் சேவைகளை மேம்படுத்த 700 மில்லியன் திர்ஹம்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார். இவ்வாறு விமானப் போக்குவரத்துத் துறையின் பொருளாதார மற்றும் செயல்பாட்டு வளர்ச்சியை நேரடியாக ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு மாற்றத் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!