அமீரக செய்திகள்

இடம் மாறும் துபாய் ஏர்போர்ட்.. மெட்ரோ சேவை DWC வரையிலும் நீட்டிக்கப்படுமா..? உங்கள் கருத்து என்ன.?

உலகளவில் மில்லியன் கணக்கான பயணிகளை கையாண்டு வரும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) மாற்றாக, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் (DWC) புதிய பயணிகள் டெர்மினல் கட்டுவதற்கான வடிவமைப்பு துபாய் ஆட்சியாளரால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்டது.

துபாய் ஏவியேஷன் கார்ப்பரேஷனின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சுமார் 128 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் இந்த புதிய டெர்மினல், ஆண்டுதோறும் 260 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இது கட்டிமுடிக்கப்படும் பொழுது உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதாவது, இன்னும் பத்து ஆண்டுகளில் DXB யின் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக DWCக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் மெட்ரோ சேவையும் DWC வரையிலும் நீட்டிக்கப்படுமா என அமீரக குடியிருப்பாளர்களிடையே எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

ஏனெனில், துபாயின் மையப்பகுதியான தேராவிலிருந்து DWC விமான நிலையம் 57 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, டாக்ஸியில் பயணிக்க குறைந்தது 1 மணி நேரம் ஆகும், மேலும் கட்டணம் 150 முதல் 180 திர்ஹம்ஸ் வரையிலும் இருக்கும். அதுவே அடுத்த 10 ஆண்டுகளில் டாக்ஸி கட்டணம் 50 முதல் 100 சதவீதம் வரை உயரவும் வாய்ப்புள்ளது.

உண்மை என்னவென்றால், இதற்கு முன்பாகவே துபாய் எக்ஸ்போவை முன்னிட்டு ரூட் 2020 வழித்தடம் அறிவிக்கப்பட்ட போதே, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் ஆனது DWC உடன் இணைக்கப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருந்தது. ஆயினும் ரெட் லைன் வழித்தடம் எக்ஸ்போ சிட்டி வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நகர மையத்துக்கும் பொது மக்களுக்கும் நெருக்கமாக இருக்கும் துபாய் சர்வதேச விமான நிலையத்துடன் (DXB) ஒப்பிடும்போது, DWC ​​துபாயின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளதால் பயணிகள் விமான நிலையத்தை அடைவதற்கு நீண்ட நேரம் ஆகும். இதனால் பயணிகளுக்கு எளிதான அணுகலை வழங்க துபாய் மெட்ரோவை நீட்டிப்பது அவசியமான தீர்வாகும் என துபாய் ஏவியேஷன் இன்ஜினியரிங் திட்டங்களின் CEO சுசான் அல் அனானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் துபாயின் தெற்கு பகுதியில் ரியல் எஸ்டேட் துறையும் நாளுக்கு நாள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், DWC வரையிலான மெட்ரோ நீட்டிப்பு, துபாய் சவுத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் எளிதான இயக்கத்தை வழங்கும் எனவும் ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துபாயில் முதன்முதலாக செப்டம்பர் 9, 2009 இல் தொடங்கப்பட்ட துபாய் மெட்ரோ சேவையானது, துபாயின் பொது போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. தற்போது ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் என இரண்டு வழித்தடங்களில் இயங்கும் துபாய் மெட்ரோ, 89.3 கிமீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ நெட்வொர்க்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது கூடுதலாக, ‘புளூ லைன்’ எனும் புதிய மெட்ரோ வழித்தடமும் கடந்த ஆண்டு துபாய் ஆட்சியாளரால் அறிவிக்கப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகளும் இந்த ஆண்டில் தொடங்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் போது மெட்ரோ சேவை துபாயின் மிகப்பெரிய பொது போக்குவரத்து வசதியாக உருவெடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!