அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று முதல் தொடங்கிய குளிர்கால சீசன்..!! 7.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் குளிர்கால சீசனானது, இன்று டிசம்பர் 22 புதன்கிழமை முதல் அதிகாரபூர்வமாக தொடங்குவதாக அமீரகத்தின் வானியல் மற்றும் விண்வெளி மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினரான முன்னணி வானியலாளர் இப்ராஹிம் அல் ஜர்வான் கூறுகையில், “டிசம்பர் 22 புதன்கிழமை குளிர்காலத்தின் முதல் நாள், அமீரக குடியிருப்பாளர்கள் அடுத்து வரும் 40 நாட்கள் குளிர்ந்த வெப்பநிலையை எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், சூரியனின் பாதை அடிவானத்திற்கு மேலே மிகக் குறைவாக இருந்தது, இது குளிர்கால சீசனின் அறிகுறியை குறிக்கிறது, இந்த நிகழ்வு நேற்று டிசம்பர் 21 அன்று நிகழ்ந்தது, மேலும் நேற்றைய நாள் ஆண்டின் மிகக் குறுகிய பகல் மற்றும் மிக நீண்ட இரவைக் கண்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான வெயில்காலத்தின் முடிவை குறிக்கும் சுஹைல் ஸ்டார் கடந்த ஆகஸ்ட் 24 ம் தேதி கண்டறியப்பட்டதை அடுத்து, அமீரகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது.

அமீரகத்தில் குளிர்கால சீசன் இன்று முதல் தொடங்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே குறைந்த பட்ச வெப்பநிலையாக நேற்று காலை அல் ஐனில் உள்ள ரக்னா பகுதியில் 7.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும் இதை விடவும் மிகக் குறைவான வெப்பநிலையை மக்கள் வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம் என்றும் NCM கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!