பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய முயற்சி : அபுதாபி போலீசார் தகவல்!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் பாதசாரிகளுக்கு நியமிக்கப்பட்ட இடங்களைத்(Pedestrian crossing) தவிர மற்ற இடங்களில் சாலைகளை கடந்ததற்காக கடந்த ஆண்டு 48,000 பாதசாரிகள் (Pedestrians) தடுத்து வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக அபுதாபி போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இவ்வாறு சாலையைக் கடப்பதன் மூலம் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கடுமையான ஆபத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பாதசாரிகளுக்கு நியமிக்கப்பட்ட இடங்களைத்(Pedestrian crossing) தவிர மற்ற இடங்களில் சாலையைக் கடப்பதை ஜேவாக்கிங்( Jaywalking) என்று கூறப்படும். அமீரகத்தில் இது சாலை விதிமீறல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வாறு Jaywalking செய்பவர்களுக்கு அபுதாபி காவல்துறை 400 திர்ஹம்ஸ் அபாரதத்தொகை விதிக்கிறது.
பாதசாரிகள் தங்களுடைய நடக்கும் நேரத்தைக் குறைக்கவும், விரைவில் தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையவும் பாதசாரிகளுக்கென போடப்பட்ட இடங்களில் சாலையைக் கடக்காமல் வாகனம் செல்லும் மற்ற இடங்களில் கடக்கின்றனர். இது எதிர்பாராத வாகன விபத்து நிகழ்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
அபுதாபி காவல்துறை, பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியமான முன்னுரிமையை வழங்குகிறது. மேலும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் கடப்பது குறித்து ஓட்டுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று காவல் துறை வலியுறுத்தியுள்ளது.
பாதசாரிகள் கடப்பதற்காக நியமிக்கப்பட்ட இடங்களுக்கும், தொழில்துறை பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளின் உள் சாலைகளிலும், வேகத்தை குறைக்க வாகன ஓட்டிகள் உறுதியளிக்க வேண்டும் என்றும், மேலும் சாலைகளை கடப்பதில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து பாதுகாப்பு நிலைமைகளை மேம்படுத்துவதற்காக, நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் ஒருங்கிணைந்து, உட்புற மற்றும் வெளிப்புற சாலைகளில் பல பாலங்களை நிறுவுதல் மற்றும் போக்குவரத்து விளக்குகளால் நிர்வகிக்கப்படும் மேற்பரப்பு பாதைகளை (surface passages) நிறுவுதல் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
அபுதாபியில் தொழில்துறை (Industries) சம்பந்தப்பட்ட தொழிலாளர் நகரங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் தீவிரப்படுத்தியுள்ளது.