இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘Electoral Bond’ முறைகேடுகள்..!! அனைத்து விபரங்களும் இங்கே..!!
இந்தியாவில் கடந்த 2017 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியால் கொண்டு வரப்பட்ட, தனி நபர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் அரசியல் கட்சியினர் நிதி பெறலாம் எனும் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதி மன்றம் விதித்த உத்தரவை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India – ECI) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் வழங்கும் முறைக்கு பொறுப்பாளரும், நாட்டின் முதன்மையான கடன் வழங்குநரும் ஆன பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India – SBI), கடந்த மார்ச் 12 ஆம் தேதிக்குள் இந்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் வழங்காவிட்டால் அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை தொடர்ந்து தற்போது இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஏப்ரல் 1, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை நன்கொடையாளர்களால் பல்வேறு வகைகளில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அவற்றில் 22,030 பத்திரங்கள் மூலம் ரூ.12,769.40 கோடி பணம் அரசியல் கட்சிகளால் மீட்கப்பட்டதாகவும் பாரத ஸ்டேட் வங்கியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான விபரங்களை வழங்கிட கால அவகாசமும் பாரத ஸ்டேட் வங்கியால் கோரப்பட்டது.
பின்னர் இந்த தரவுகளை இணையதளத்தில் பதிவேற்ற, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 15 மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கிய நிலையில், இதன் விவரங்களை வாங்குபவர்களின் பட்டியல் மற்றும் பயனாளிகளின் பட்டியல் என இரண்டு பகுதிகளாக நீதிமன்றம் கட்டளையிட்ட காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நன்கொடையாளர்கள் மற்றும் பயனாளிகள்
ஏப்ரல் 2019 முதல் 2024 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பணம் பெற்ற பயனாளிகளில் பாரதிய ஜனதா கட்சி (BJP) முதலிடத்தில் இருப்பது மார்ச் 14ஆம் தேதி வெளியான தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளால் பணமாக்கப்பட்ட அனைத்து தேர்தல் பத்திரங்களில் 48 சதவீத அளவிலான பணத்தை பாஜக பெற்றுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.6,060 கோடி ஆகும். இதற்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,609.50 கோடியும் (12.6 சதவீதம்), இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரூ.1,421 கோடியும் (11 சதவீதம்) பெற்றுள்ளது.
அதே போன்று, இந்தியாவின் சில முன்னணி நிறுவனங்கள் பத்திரங்களை வாங்கியவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன, இதில் பன்னாட்டு எஃகு தயாரிப்பு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலின் நிர்வாகத் தலைவரான லட்சுமி நிவாஸ் மிட்டல் பெயரில் வாங்கப்பட்ட ரூ.35 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் உட்பட, கிரண் மசூம்தார் ஷா, வருண் குப்தா, பி.கே. கோயங்கா, ஜைனேந்திர ஷா மற்றும் மோனிகா என பலரின் பெயரிலும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களை தவிர, பஜாஜ் ஆட்டோ ரூ.18 கோடி, பஜாஜ் ஃபைனான்ஸ் ரூ.20 கோடி, மூன்று இண்டிகோ நிறுவனங்கள் ரூ.36 கோடி, ஸ்பைஸ்ஜெட் ரூ.65 லட்சம், இண்டிகோவை சேர்ந்த ராகுல் பாட்டியா ரூ.20 கோடி. மும்பையைச் சேர்ந்த க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் ரூ.410 கோடி, ஹால்டியா எனர்ஜி ரூ.377 கோடி என முன்னணி நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், ECI வெளியிட்ட பட்டியலின்படி, பாஜகவிற்கு அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் (Future Gaming and Hotel Services) எனும் பலராலும் அதிகம் அறியப்படாத லாட்டரி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் மட்டும் ரூ.1,368 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியிருப்பது பலருக்கும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. ஏனெனில் இந்நிறுவனம் கடந்த மார்ச் 2022 ம் ஆண்டு அமலாக்க துறையால் விசாரணை வளையத்திற்குள் உள்ளானதும், அதன் பிறகு இவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு அடுத்ததாக, மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Megha Engineering and Infrastructure ltd) எனும் நிறுவனம் ரூ.966 கோடியை நன்கொடையாக வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் நன்கொடை வழங்கியதன் பிறகு 14,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஒப்பந்தம் மதிய அரசால் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் நேரடி நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.
இது குறித்து இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக அரசு தங்களிடம் உள்ள அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) போன்ற மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி 45 நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடிகளை வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், 2017 ல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், தற்போது 2019 ம் ஆண்டிலிருந்தே தரவுகள் வெளிவந்திருப்பதாகவும், இடைப்பட்ட 2 வருட கால தரவுகளையும் வெளியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
பாஜக தவிர, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரத ராஷ்டிர சமிதி, சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, பிஜு ஜனதா தளம், கோவா பார்வர்ட் கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனசேனா கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தல் பாத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.