இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் பங்கேற்ற வளைகுடா தலைவர்கள்… தடல் புடலாக நடைபெற்ற வரவேற்பு!

டெல்லியில் 18வது ஜி20 உச்சி மாநாடானது பிரகதி மைதானத்தில் தொடங்கியுள்ள நிலையில் வளைகுடா நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று இந்தியாவிற்கு மரியாதை அளித்துள்ளனர். இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஓமான் சுல்தானின் சிறப்புப் பிரதிநிதியுமான சையத் ஆசாத் பின் தாரிக் அல் சைட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மத்திய கிழக்கு நாடுகளை இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ரயில் மற்றும் கப்பல் வலையமைப்பைக் கட்டமைக்க அமெரிக்கா மற்றும் பிற G20 உறுப்பினர்களுடன் உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு விமானம் பயணம் அல்லாமல் ரயில் மற்றும் கப்பல் மூலம் பயணிப்பதற்கான சாத்திய கூறுகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக G20 தலைவர்கள் பிளவுபட்டு கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான உடன்பாட்டைக் கண்டுபிடிப்பதில் குழப்பமடைந்துள்ள நிலையில், உச்சிமாநாட்டின் மிகவும் உறுதியான விளைவுகளில் ஒன்றாக இந்த திட்டத்தை விவாதிப்பதற்கான ஒப்பந்தம் எட்டபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வு, “ஒன் எர்த் (one earth)” என்ற தலைப்பில், கிரகத்தையும் அதன் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதில் சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பை எடுத்துரைத்தது, காலநிலை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு உலகம் ஒத்துழைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது.
உச்சிமாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த பல்வேறு நாட்டு தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று விருந்தினர்களுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய சிறப்பம்சங்கள் பின்னர் விரிவாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.