அமீரகத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீரகத்தில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமீரகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் மூன்று இத்தாலியர்கள், இரண்டு அமீரக குடிமக்கள், இலங்கையை சேர்ந்த இரண்டு நபர்கள் , பிரிடிஷ் நாட்டை சேர்ந்த இரண்டு நபர்கள், இரண்டு இந்தியர்கள், மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருவர், தான்சானியாவிலிருந்து ஒருவர் மற்றும் ஈரானில் இருந்து ஒருவர் என மொத்தம் 15 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதின் மூலம் அவர்களின் பாதிப்பைக் கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அமீரகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 12 பேர் குணமுடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 10 நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸின் எண்ணிக்கை 1,14,000 க்கும் அதிகமாக உள்ளது. இதில் 4,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது .