அமீரகத்தில் மேலும் புதிதாக 15 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!! வைரஸ் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 113 ஆக உயர்வு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செவ்வாயன்று கொரோனா வைரஸால் புதிதாக 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 113 ஆக உயர்த்தியுள்ளது.
புதிய நோய்தொற்று வழக்குகள் அமைச்சகத்தின் ஆரம்பகட்ட கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் முறை மூலம் கண்டறியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே நோய்தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்று MoHaP ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை அளித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான், செர்பியா, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா, கிரீஸ், ரஷ்யா, உக்ரைன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும், பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் இருந்து தலா இருவரும் தற்பொழுது புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் வைரஸ் பரவாமல் தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.