அமீரக செய்திகள்

UAE: டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு மட்டுமே விமான நிலைய புறப்படும் பகுதிக்குள் அனுமதி..!! வழிமுறைகள் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு டிசம்பர் 1 முதல் 4 வரை என நான்கு நாட்கள் ஐக்கிய அரபு அமீரக நினைவு தினம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தின விடுமுறையை முன்னிட்டு விடுமுறை கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனையொட்டி, நவம்பர் 25 முதல் டிசம்பர் 5 வரை துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக 1.8 மில்லியன் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 நாள் காலப்பகுதியில் சராசரி தினசரி போக்குவரத்து ஒரு நாளைக்கு 164,000 பயணிகளை எட்டும் என்றும் டிசம்பர் 4 ம் தேதி மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்றும் அன்று பயணிகள் எண்ணிக்கை 190,000 ஐத் தாண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பயணிகள் நெரிசல் காரணமாக துபாய் விமான நிலையங்கள் செவ்வாயன்று அமீரக பயணிகள் தங்கள் இலக்குக்கான பயண விதிமுறைகளை சரிபார்த்து, அடுத்த 11 நாட்களில் விமான நிலையத்திற்குச் செல்ல முன்கூட்டியே பயணித்து கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு ஆலோசனையை வழங்கியுள்ளது.

மேலும் இந்த பரபரப்பான காலகட்டத்தில், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் பகுதிக்குள் டிக்கெட் பெற்ற பயணிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்க பயணிகள் ஆன்லைனில் செக்-இன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் நடவடிக்கைகளின் துணைத் தலைவர் எஸ்ஸா அல் ஷம்சி கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மென்மையான மற்றும் வசதியான அனுபவத்தை உறுதி செய்வதற்காக துபாய் விமான நிலையங்கள் எப்பொழுதும் போல், விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் எங்கள் அனைத்து வணிக மற்றும் சேவை கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.

வரும் நாட்களில் துபாய் விமான நிலையத்திலிருந்து பயணிகள் சுமூகமான பயண அனுபவத்திற்காக பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

>> நீங்கள் பயணிக்கும் இடத்திற்கான சமீபத்திய பயண விதிமுறைகளைப் பற்றி அவ்வப்போது தெரிந்து வைத்து இருங்கள். பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு விமான நிலையத்தை அடைவதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தேவையான செல்லுபடியாகும் தன்மையுடன் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

>> பீக் ஹவர்ஸ் (peak hours) என சொல்லக்கூடிய பயணிகள் போக்குவரத்து அதிகமுள்ள நாட்களில் விமான நிலையங்க்ளுக்கான சாலைகள் பரபரப்பாக இருக்கும் என்பதால், விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் அந்த பாதை வழியாகச் செல்வதற்கும் கூடுதல் நேரத்தைத் ஒதுக்குங்கள்.

>> நீங்கள் டெர்மினல் 1 ல் இருந்து புறப்பட வேண்டியிருந்தால் புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள். டெர்மினல் 3 இலிருந்து புறப்படுபவர்கள், அவர்கள் புறப்படுவதற்கு 24 மணிநேரம் முன்னதாகவே செக்-இன் செய்வதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம்.

>> உங்கள் பயணத்தை சுமூகமாகத் தொடங்க ஆன்லைன் மற்றும் சுய-சேவை விருப்பங்களைப் பயன்படுத்தலாம்.

>> இந்த பரபரப்பான காலகட்டம் முழுவதும் பீக் ஹவர்ஸில் டிக்கெட் பெற்ற பயணிகள் மட்டுமே புறப்படும் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீட்டிலேயே விடைபெற்றுக்கொள்ளுங்கள்.

இது போன்ற வழிமுறைகளை விமான பயணிகள் பின்பற்ற விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!