அமீரகத்தில் ஃபேஸ்மாஸ்க், சானிடைசர் விலைகளை உயர்த்தி விற்பனை செய்ததற்காக எட்டு மருந்தகங்களை மூட உத்தரவு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முக கவசங்கள் (face masks), சானிடைசர்கள் (sanitisers) மற்றும் கையுறைகளின் (gloves) விலையை உயர்த்தி விற்பனை செய்ததாக வாடிக்கையாளர்களிடமிருந்து விலை உயர்வு தொடர்பான புகார்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அமீரகத்தில் எட்டு மருந்தகங்களை (pharmacies) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டுத் துறை (Sharjah Economic Development Department-SEDD) அமீரகத்தில் உள்ள 28 மருந்தகங்களில் சோதனைகளை நடத்தியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட மருந்தகங்களில் 8 மருந்தகங்களை மூட உத்தரவிட்டும் 4 மருந்தகங்களுக்கு அபராதமும் மேலும் 9 மருந்தகங்களுக்கு விதிமீறல்களுக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கொண்ட இந்த சோதனைகள் சானிடைசர்கள் மற்றும் முக கவசங்ளை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யும் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக SEDD உறுதிப்படுத்தியுயுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி தங்களின் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளுக்கு கடும் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து , பொதுமக்கள் விதிமீறல்கள் மற்றும் விலையேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கடைகளின் மீது புகாரளிக்க SEDD, தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதன் கால் சென்டர் தொலைபேசி எண்ணின் (80080000) வழியாகவோ அல்லது அதன் சமூக வலைதளம் (Sharjaheconomic) வழியாகவோ அல்லது www.shjconsumer.ae என்ற இணையதளத்தின் வாயிலாகவோ பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.