அமீரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக தேசிய சுத்திகரிப்பு திட்டம் (Nationwide Disinfection Campaign) மார்ச் 26ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது சுத்திகரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இத்திட்டமானது மேலும் ஒரு வாரம் நீட்டிக்க உள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Extension of The National Disinfection Programme until April 5 across the #UAE . #StayHome pic.twitter.com/E2BrgIOVL2
— Dubai Media Office (@DXBMediaOffice) March 28, 2020
சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் உள்துறை அமைச்சகம் (MOI) ஆகியவை ஒன்றிணைந்து நாடு முழுவதும் சுத்திகரிப்பு பணிகளை கடந்த வியாழக்கிழமையில் இருந்து தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளானது ஏப்ரல் 5 வரை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமை புதிதாக 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதனையொட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 468 ஆக உயர்ந்துள்ளது.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் கூட்டத்தை சந்தித்த சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹோசானி தேசிய சுத்திகரிப்புப்பணி திட்டத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து, சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளும் சமயங்களில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் போது, அதிகாரிகள் பொதுமக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தும் “Stay Home” என்பதை கடைபிடிக்காமல் விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியத் தேவைக்காக வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், துபாய் மற்றும் அபுதாபி காவல்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதளத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு வெளியேறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.