அமீரக செய்திகள்

UAE: விண்வெளியில் நடந்த முதல் அரபு நாட்டவர்.. வரலாற்று சாதனை படைத்த எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல்நேயாதி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி மற்றும் ‘இம்பாசிபிள் இஸ் பாசிபிள்’ என்ற அடைமொழி பொறிக்கப்பட்ட தனது விண்வெளி உடையுடன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே (ISS) நேற்று வெள்ளிக்கிழமை, தனது முதல் விண்வெளி நடையை (space walk) நிறைவேற்றியதன் மூலம், விண்வெளியில் நடந்த அரபு உலகின் முதல் விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல்நேயாதி படைத்துள்ளார்.

அல்நேயாடி மற்றும் மூத்த நாசா விண்வெளி வீரர் ஸ்டீபன் போவன் ஆகிய இருவரும் தங்களது ஆறு மணி நேர விண்வெளிப் பயணத்தை அமீரக நேரப்படி, மாலை 5.11 மணிக்கு தொடங்கினர். அவர்களின் விண்வெளி நடைப்பயணத்திற்கு ISS-ல் இருந்த நாசா விமானப் பொறியாளர்கள் ஃபிராங்க் ரூபியோ மற்றும் வூடி ஹோபர்க் ஆகியோர் உதவியுள்ளாரகள். அப்போது வூடி ஹோபர்க் கூறினார்: “சுல்தான், வாழ்த்துக்கள், நீங்கள் இன்று வரலாற்றை உருவாக்குகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

இரு விண்வெளி வீரர்களும் தங்கள் உடல் இணைப்புகளைப் பாதுகாத்த பிறகு, விண்வெளி நடைப்பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் நடக்கவும், கேபிள்களை சரிசெய்யவும் பயன்படுத்தப்படும் ஆர்டிகுலேட்டிங் போர்ட்டபிள் ஃபுட் ரெஸ்ட்ரெயின்ட் (APFR) தளத்தை இடமாற்றம் செய்ய நகர்ந்துள்ளனர்.

இரு விண்வெளி வீரர்களும் விண்வெளி நடையை மேற்கொண்டபோது ஹூஸ்டனில் உள்ள நாசா குழு அதன் நேரலை ஒளிபரப்பில் அல்நேயாடியின் நல்ல பணிக்காக அவரைப் பாராட்டியுள்ளது. அப்போது “அது சுவாரஸ்யமாக இருந்தது, சுல்தான். உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் உள்ளன” என்று நாசா தரைக் கட்டுப்பாட்டாளர் எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல்நேயாதியிடம் கூறியுள்ளார்.

அமீரகத்தின் இந்த விண்வெளி பயணத்தின் மூலம் விண்வெளியில் நடந்த முதல் அரபு நாட்டவர் என்ற பெருமையை எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல்நேயாதி படைத்ததுடன், முதல் அரபு நாடு என்ற பெருமையையும் ஐக்கிய அரபு அமீரகம் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2019 இல் அமீரகத்திலிருந்து விண்வெளிக்கு சென்ற முதல் எமிராட்டி விண்வெளி வீரரான ஹஸ்ஸா அல்மன்சூரி விண்வெளி நடையை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!