அமீரக செய்திகள்

2,000க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய மொராக்கோ நிலநடுக்கம்… ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!

கடந்த வெள்ளிக்கிழமை மொராக்கோவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மொராக்கோ அரசாங்கத்திற்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி கூறுகையில் ” என் சகோதர மன்னர் ஆறாம் முகமது மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நாங்கள் எங்கள் சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்து ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். இந்த கடினமான நேரத்தில் கடவுள் மொராக்காவை பாதுகாக்க வேண்டும்” எனவ கூறியுள்ளார்.

இது குறித்து, ஷேக் முகமது வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். கடவுள் அவர்களுக்கு பொறுமை மற்றும் ஆறுதலை அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இது குறித்து, ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைகளின் அடிப்படையில் இதுவரை 2,000 க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர் எனவும் சுமார் 2,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு வசித்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது அனைவரிடமும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமீரகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!