விதிமீறலில் ஈடுபட்டோர் அபராதம் செலுத்தாதவரை Emirates ID-யை புதுப்பிக்க முடியாது..!!! காவல்துறை அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக ஸ்டேஹோம் (Stay Home) விதிகளை கடைபிடிக்காமல் விதிகளைமீறி வெளியே சுற்றிய பாதசாரிகளுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை செலுத்தும் வரை அவர்களின் எமிரேட்ஸ் ID-யை புதுப்பிக்க முடியாது என்று ஷார்ஜா காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட விதிகளை மீறியவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதற்காக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 120 ரோந்து வாகனங்களில் காவல்துறையினர் பணிகளில் ஈடுபட்டனர். இதன் மூலம், சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் சமயத்தில் சரியான காரணங்கள் இல்லாமல் அக்கம் பக்கத்திலும் பிரதான வீதிகளிலும் அலைந்து கொண்டிருந்த ஏராளமான பாதசாரிகளுக்கு ரோந்துப் பணியாளர்கள் அபராதம் விதித்தனர்” என்று கூறியுள்ளார்.
அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதமானது குடியிருப்பாளர்களின் எமிரேட்ஸ் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை பணியாளர் வெளியே நடமாடும் நபரை தடுத்து நிறுத்தி அவர் வெளியே வந்ததற்கான காரணத்தை கேட்கும் பொது, நபர்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லையெனில், எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) எண் காவல்துறையினர் வைத்திருக்கும் மின்னணு அமைப்பில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் அந்த அபராதமானது அடையாள அட்டையில் பதிவு செய்யப்படுவதால், அவர்களால் இந்த அபராதம் செலுத்தப்படாதவரை அடையாள அட்டையை புதுப்பிக்க முடியாது.
மேலும் அவர் கூறுகையில், “இந்த விதிமீறலை குறிப்பிட்ட நபர் மீண்டும் செய்தால் அவரின் அபராதம் இரட்டிப்பாக விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை தீர்மானத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகையே விதிகளை மீறுபவர் மீது விதிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறும் வாகன ஓட்டிகள்
சுத்திகரிப்பு திட்டத்தின் போது ஒரு வாகனம் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், வாகன எண்ணை பதிவு செய்வதன் மூலம் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
வேலை காரணங்கள் அல்லது மருத்துவ நிலைமைகள் போன்ற தகுந்த காரணங்களிற்கான ஆவணங்களை காட்டி அவர்கள் வெளியே வந்ததிற்கான காரணம் நிரூபிக்கப்படவில்லை என்றால் மட்டுமே இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது கடமைகள்
சுத்திகரிப்பு திட்டத்திற்கான விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் அவ்வாறு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முற்படும் அதிகாரிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்கக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தல்
குடியிருப்பாளர்கள் விதிமீறல்களை மீறுவதற்கான காரணத்தை கண்டறிய “ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence)” போன்ற பல வழிமுறைகளையும் காவல்துறை பயன்படுத்துகிறது என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியில் நடமாட கட்டுப்பாடுகள் இருக்கும் நேரத்தில் ஒருவர் பணி நிமிர்த்தமாக வீட்டை விட்டு வெளியேறுவாராயின், அவர் பணிபுரியும் துறையை உறுதிப்படுத்த அவரின் வேலை செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டையை (ID) காண்பிப்பதின் மூலம் அது உறுதிப்படுத்தப்படுகிறது. அவசரகால மருத்துவ தேவையின் காரணமாக யாராவது மருத்துவமனைக்குச் செல்கிறார்களானால், அவர்கள் செல்லும் பாதையை இயக்க கட்டுப்பாட்டு அறையில் இருந்து சாலைகளில் நிறுவப்பட்டிருக்கும் கேமெராக்களை கொண்டு கண்காணிப்பதன் மூலம் காவல்துறையினர் அவரது வார்த்தைகளை உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொய்களைக் கூறி வெளியில் நடமாடிய பலரையும் ரோந்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பிடிபடுபவர்களுக்கு அபராதம் நிச்சயம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.