அமீரக செய்திகள்

தன் மகனின் இறுதி சடங்கை பேஸ்புக் லைவ் வழியாக கண்டு கலங்கிய இந்திய பெற்றோர்..!! விமான போக்குவரத்து தடையால் ஏற்பட்ட சோகம்..!!

கொரோனா வைரசால் விதிக்கப்பட்டிருக்கும் விமான போக்குவரத்து தடையின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு இந்திய குடும்பத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தன் மகனின் இறுதிச் சடங்கில் நேரில் கலந்துகொள்ள முடியாமல் பேஸ்புக் லைவ் வழியாக பார்த்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த அந்த சிறுவனின் பெற்றோர் இந்தியாவில் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். 2004 ஆம் ஆண்டு ஈஸ்டரில் பிறந்த ஜுவல் ஜி. ஜோமே (Jeuel G. Jomay) எனும் அந்த சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஏழு வருடங்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று தனது 16 வயதை அடைவதற்க்கு ஒரு நாள் முன்னதாகவே உயிரிழந்து விட்டான். அவனின் இழப்பை கண்டு அவனின் பெற்றோரும் உடன் பிறந்த சகோதர்களும் அதிர்ச்சியில் மனமுடைந்துபோய் விட்டதாக அச்சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஷார்ஜாவில் உள்ள GEMS மில்லினியம் ஸ்கூலில் 10 ஆம் வகுப்பு படித்துவந்த ஜுவல், இரு வாரங்களுக்கு முன்பு துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் (American Hospital) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் உடலை தங்களின் சொந்த ஊரில் அடக்கம் செய்ய விரும்பிய பெற்றோரின் முயற்சிக்கு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ஏப்ரல் 15 ஆம் தேதி புதன்கிழமை அன்று சமூக சேவையாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் உதவியோடு சிறுவனின் உடலை ஒரு சரக்கு விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் எவரும் இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லையென ஜீயலின் உறவினர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது “எந்த விமானங்களும் விரைவில் அனுமதிக்கப்படவில்லை. ஜீயலின் தந்தையும் இந்தியாவிற்கு செல்ல விரும்பினார். ஆனால் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டனர். இறுதியாக, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு நாங்கள் அவரை நேற்று இந்தியாவிற்கு அனுப்ப முடிந்தது. எங்களை ஆதரித்த அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஜீயலின் உடல் இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக துபாயில் உள்ள முஹைஸ்னாவில் இருக்கும் எம்பாமிங் மையத்தில் (embalming centre in Muhaisnah) நடைபெற்ற பிரார்த்தனையில் இயக்க கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளி விதிகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இறுதியாக இந்தியாவை சென்றடைந்த ஜீயலின் உடலுக்கு நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி வியாழக்கிழமை அவரின் சொந்த ஊரான பதனம்திட்டாவில் உள்ள குடும்ப வீட்டில் பிராத்தனையுடன் தொடங்கிய இறுதி சடங்கை ஷார்ஜாவிலிருந்து பேஸ்புக் லைவ் வழியாக கண்ட அவனின் பெற்றோர் மனமுடைந்து போனதாக அவர்களின் உறவினர் தெரிவித்துள்ளனர். மேலும் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த இறுதி சடங்கை மற்ற குடும்பத்தினர்களும், இங்குள்ள தேவாலய உறுப்பினர்களும் காண்பதற்கு ஏதுவாக ஷார்ஜாவில் உள்ள செயின்ட் மேரி தேவாலயம் அதன் வலைதளத்தின் மூலம் யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு கேரளாவிலும் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்ததாகவும் ஜீயலின் உறவினர் கூறியிருந்தனர்.

தன் சொந்த மகனின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாத பெற்றோரின் நிலையை கண்ட அனைவரும் கண்கலங்கினர். விமான போக்குவரத்து தடையின் காரணமாக இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலைமாறி கூடிய விரைவில் இயல்புநிலை திரும்ப நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!