அமீரக செய்திகள்

துபாயின் Al Ras, Al Naif பகுதியில் சமூக சேவை ஆற்றிவந்த பிரபல இந்தியருக்கும் கொரோனா தொற்று..!! மருத்துவமனையில் அனுமதி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பாக இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமான சமூக சேவகர் நசீர் வதனபள்ளியும் (Naseer Vatanapally) தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளாக சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். சமீபத்தில் துபாய் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட அல் நைஃப் (Al Naif) மற்றும் அல் ராஸ் (Al Ras) போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “கடந்த மூன்று, நான்கு நாட்களாக லேசான தொண்டை எரிச்சல் உள்ளிட்ட சிறிய அறிகுறிகள் எனக்கு தென்பட்டது. சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, நான் கொரோனாவிற்கான சுய பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டவுடன், நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டேன்” என்று வதனப்பள்ளி கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “நான் நலமாக உள்ளேன். எனக்கு லேசான தலைவலி, லேசான தொண்டை எரிச்சல் தவிர வேறு எந்த பெரிய அறிகுறிகளும் இல்லை. எனக்கு அமீரக சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது. நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன்” என்றும் அவர் கூறினார். எனினும், அமீரக அரசால் அறிவுறுத்தப்படும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்றுமாறும், அத்தியாவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மூன்று குழந்தைகளுக்கு தந்தையான வதனப்பள்ளி, இந்த காலக்கட்டத்தில் சமூக சேவை செய்வதற்காக, 20 நாட்களுக்கு முன்பே தனது குடும்பத்தினரை விட்டு ஹோட்டலில் தங்கி தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வந்துள்ளார். அவர் உள்ளூர் சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நைஃப் மற்றும் அல் ராஸில் உள்ள மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த தேசிய சுத்திகரிப்பு திட்டம் தொடங்கியதில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 10,000 உணவுப் பொட்டலங்களை வழங்கியதாகக் கூறினார். குடியிருப்பாளர்களுடைய அனைத்து தேவைகளும் கவனத்தில் கொண்டு பூர்த்தி செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தங்கி இருந்தால் மட்டும் போதுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத்தூதரகம் (Consulate General of India) கடந்த ஏப்ரல் 4 ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், சுத்திகரிப்பு திட்டத்தில் நசீர் வதனப்பள்ளி ஆற்றக்கூடிய பணிக்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில் “இந்திய சமூகத்தை சார்ந்த நசீர் வதனபள்ளி மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்கள் ஆற்றக்கூடிய சிறந்த பணிக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!