வெளிநாட்டில் வசிக்கும் UAE விசா வைத்திருப்போர் அமீரகத்திற்குள் நுழைய விதித்த தடை..!! மேலும் இரு வாரங்கள் நீட்டிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் தாக்கத்தையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் விமான சேவைகளை ரத்து செய்தல், அமீரக விசா வைத்திருந்து வெளிநாட்டில் இருப்பவர்கள் அமீரகம் வருவதற்கு தடை, பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருத்தல் போன்ற பல நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
இந்நிலையில், செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருந்து தற்பொழுது வெளிநாட்டில் இருக்கும் மக்கள் அமீரகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டிருந்த முடிவானது, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (General Civil Aviation Authority, GCAA) உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது வியாழக்கிழமை (2.4.2020) முதல் அடுத்த இரு வாரங்களுக்கு அமீரக விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தடையானது முன்பு மார்ச் 31 ஆம் தேதி வரையிலும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக விசாக்களை வைத்திருந்து தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பவர்கள், அவசரகால சூழ்நிலைகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பாதுகாப்பாக திரும்ப விரும்பினால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘குடியிருப்பாளர்களுக்கான தவாஜூடி (Tawajudi For Residents)’ சேவையில் பதிவு செய்யுமாறு வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MoFAIC) கேட்டுக்கொண்டுள்ளது.
UAE renews entry suspension for foreign nationals holding valid UAE residence visas for two weeks.https://t.co/BsWVvLkEn9
— وزارة الخارجية والتعاون الدولي (@MoFAICUAE) April 2, 2020
“Tawajudi For Residents” பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
தொடர்ந்து GCAA தனது அறிக்கையில், விரைவில் செயல்பட உள்ள குறிப்பிட்ட பயணிகள் விமானங்களானது, அமீரகத்தில் இருக்கும் விசிட் மற்றும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களில், தங்களுடைய நாட்டிற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்காக மட்டுமே தற்காலிகமாக செயல் பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) கூறிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.