அமீரக செய்திகள்

அமீரக விசா நீட்டிப்பு தொடர்பான கேள்விகளுக்கு FAIC ஆணையத்தின் சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (Federal Authority for Identity and Citizenship,FAIC) காலாவதியான அனைத்து ரெசிடென்ஸ் விசாக்கள், நுழைவு அனுமதி (entry permit) மற்றும் எமிரேட்ஸ் ஐடி (emirates ID) போன்றவற்றை இந்த வருடம் இறுதி வரையிலும் நீட்டிப்பதாக கடந்த திங்களன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் படி, அமீரகத்தில் இருக்கக்கூடியவர்களின் அனைத்து வகையான விசாக்களும், மற்றும் அமீரகத்திற்கு வெளியே இருக்கக்கூடியவர்களின் ரெசிடென்ஸ் விசாக்களும் இந்த வருடம் இறுதி வரையிலும் செல்லுபடியாகும் என்று அரசின் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது பற்றி எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் உயர் அதிகாரி கூறுகையில், இந்த நடைமுறை தானாகவே செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இவர் கூறியுள்ளதன்படி, மார்ச் 1, 2020 க்குப் பிறகு விசா காலாவதியானால், விசாவினை புதுப்பிக்க எந்த ஒரு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை என்றும், காலாவதியான விசாவானது டிசம்பர் 31, 2020 வரை தானாகவே நீட்டிக்கப்படும் என்றும் கூறினார்.

அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (FAIC) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் காமிஸ் அல் காபி அவர்கள் இது பற்றி அபுதாபி வானொலிக்கு அளித்த பேட்டியில், இந்த திட்டம் குறித்து பல விஷயங்களை தெளிவுபடுத்தினார். அதில் குறிப்பிடப்பட்ட சில விபரங்கள் நீங்கள் அறிந்து கொள்வதற்காக கேள்வி மற்றும் பதில்களாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி : விசா செல்லுபடியாகும் நீட்டிப்பைப் பெறுவதற்கான செயல்முறை என்ன?

மார்ச் 1 ஆம் தேதியுடன் காலாவதியான குடியிருப்பாளர்களின் ரெசிடென்ஸ் விசாக்கள் தானாகவே 2020 டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரிக் அல் காபி கூறினார்.

கேள்வி : மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான எமிரேட்ஸ் ஐடிகள் வங்கி மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகுமா?

ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை உத்தரவுகளை அமல்படுத்துவதன் பொருட்டு, மார்ச் 1 ஆம் தேதியுடன் காலாவதியான எமிரேட்ஸ் ஐடிகள் அனைத்தும் அதாவது அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் செல்லுபடியாகும் என்று பிரிக் அல் காபி கூறினார். மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும், அவை வங்கி மற்றும் அரசு சேவைகள் மற்றும் இன்ன பிற அதிகாரபூர்வ பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று கூறினார். எமிரேட்ஸ் ஐடிகளை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதற்காக, எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்களின் தொலைபேசி எண்ணிற்கு தங்களின் தனித்துவமான அமைப்பின் மூலம் SMS அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் .”

கேள்வி : ஒரு வெளிநாட்டவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே இருந்தால், அவரது விசா ரத்து செய்யப்படுமா?

ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து அமீரகத்திற்குள் இருப்பவர்கள் மற்றும் அமீரக ரெசிடென்ஸ் விசாவை வைத்திருந்து தங்கள் சொந்த நாடுகளில் இருப்பவர்கள் ஆகிய அனைவருக்குமே இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசா செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தங்கியிருக்கும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களுக்கு விசாக்கள் ரத்து செய்யப்படாது” என்று பிரிக் அல் காபி கூறியுள்ளார்.

கேள்வி : விசிட் விசாக்கள் மற்றும் நுழைவு அனுமதி பற்றிய நிலை என்ன?

மார்ச் 1 முதல் காலாவதியான வெளிநாட்டினரின் விசிட் விசாக்கள் மற்றும் நுழைவு அனுமதி (entry permit) டிசம்பர் இறுதி வரை தானாகவே புதுப்பிக்கப்படும்.

கேள்வி : வெளிநாட்டவர்களுக்கு ஏதேனும் கூடுதல் அபராதம் விதிக்கப்படுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தங்கள் விசாக்களில் ஸ்டாம்பை (visa stamp) பெறுவதற்கோ, எமிரேட்ஸ் ஐடியை செயலாக்கவோ அல்லது மருத்துவ காப்பீட்டைப் பெறவோ முடியாத வெளிநாட்டவர்களுக்கு தாமதத்திற்கான அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்று அவர் கூறியுள்ளார்.

கேள்வி : இந்த கடினமான காலகட்டத்தில் எனது குடும்பத்தினருடன் இருக்க எனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புகிறேன். அதற்கு ஏதும் வழிமுறை உள்ளதா?

சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்புவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதற்கு உண்டான வழிமுறைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய அறிவிப்பு அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

source : Khaleej Times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!