அமீரக செய்திகள்

அமீரகத்தில் மார்ச் 1 க்கு முன்னர் காலாவதியான நுழைவு அல்லது குடியிருப்பு விசாக்களுக்கான அபராதம் தள்ளுபடி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய வெளிநாட்டவர்களில், மார்ச் 1, 2020 க்கு முன்னர் காலாவதியான நுழைவு (entry) அல்லது குடியிருப்பு விசா (residency permit) உள்ளவர்கள் எந்த வித அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் காமிஸ் அல் காபி, இன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் இந்த புதிய உத்தரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இந்த செய்தியை அல் காபி கூறியுள்ளார்.

பிரிகேடியர் காமிஸ் அல் காபி மேலும் கூறுகையில், மே 18 ஆம் தேதிக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ள காலாவதியான நுழைவு அல்லது குடியிருப்பு விசா உள்ளவர்களுக்கு அபராதம் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவது அமீரக ஜனாதிபதி அவர்களின் உத்தரவில் அடங்கும். இந்த சலுகை காலம் மே மாதம் 18 ம் தேதியிலிருந்து மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் “இந்த உத்தரவில் காலாவதியான எமிரேட்ஸ் ஐடி மற்றும் வேலை செய்வதற்கான அனுமதி (work permit) மீதான அபராதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றும் அல் காபி கூறியுள்ளார். மேலும் கூறுகையில், தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் பயனாளிகள் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்புவதில் எந்த தடங்கலும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் ஸ்மார்ட் தளத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அல் காபி வலியுறுத்தியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!