நாளை முதல் துபாயில் டிராம், மரைன் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..!! RTA அறிவிப்பு..!!
கொரோனாவின் பாதிப்பையொட்டி துபாயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராம் மற்றும் மரைன் போக்குவரத்து சேவைகள் நாளை (புதன்கிழமை, மே 13) முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority – RTA) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி மே 13 புதன்கிழமை முதல் துபாய் டிராம் (Tram) மற்றும் மரைன் (Marine) போக்குவரத்து சேவைகள் தங்களுடைய வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று RTA தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பொது போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நிலையங்களில் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி துபாயில் பொதுப்போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து படிப்படியாக தளர்த்தத் தொடங்கியது. அதன்படி துபாய் மெட்ரோ சேவை ஏப்ரல் 26 முதல் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டது. மேலும் வாகனங்களுக்கான கட்டண பார்க்கிங் முறையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதாக RTA அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, மீண்டும் இயக்கப்பட உள்ள துபாய் டிராம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பயன்பாட்டில் இருக்கும். மேலும் RTA இது பற்றி கூறுகையில், “டிராமில் பயணிக்க விரும்பும் பயணிகள் 30 நிமிடங்களுக்கு முன்பாகவே டிராம் நிலையத்திற்குச் செல்லுங்கள். முக கவசம் அணிய மறக்காதீர்கள். இது கட்டாயமாகும்” என்று ட்விட்டரில் கூறியுள்ளது.
இருப்பினும், துபாய் வாட்டர் கேனல் மெரைன் சேவை (Dubai Water Canal), அல் குபைபா நிலையம் மற்றும் ஷார்ஜா அக்குவாரியம் நிலையம் ஆகியவற்றுக்கு இடையேயான பெர்ரி சேவைகள் (Ferry Service) மற்றும் பொழுதுபோக்கிற்கான படகு சேவைகள் (recreational marine services) மீதான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Commuters are obliged to wear masks to ensure maximum protection of both riders and operators.#RTA
— RTA (@rta_dubai) May 12, 2020