அமீரக செய்திகள்

துபாயில் தமிழக பெண்களின் WIT அமைப்பு நடத்திய பிரத்யேக வேலைவாயப்பு முகாம்.. 2000 பெண்கள் பங்கேற்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடும் பெண்களுக்கென பிரத்யேகமாக ஒரு வேலைவாய்ப்பு முகாம் ஒன்று துபாயில் கடந்த சனிக்கிழமையன்று நடத்தப்பட்டுள்ளது. துபாயில் அமைந்துள்ள டவுன்டவுன் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற “All Women’s Job Fair” எனும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிட்டத்தட்ட 2,000 வெளிநாட்டை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் பெண்களின் அமைப்பான WIT என சுருக்கமாக அழைக்கப்படும் ‘Women in Tamil Nadu’ அமைப்பினரால் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு குறித்து WIT இன் தலைவர் மெர்லின் கோபி என்பவர் பேசியபோது, WIT இந்த அனைத்து பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியதற்காக பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேலை தேடும் பெண்களுக்கு ஒரே இடத்தில் பல நிறுவனங்களைச் சந்திக்கும் வாயப்பை வழங்கியதாகவும், இது பல வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது போன்ற வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், சில நிறுவனங்களை அணுகி, அனைத்து நாடுகளைச் சேர்ந்த பெண் வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதற்கு முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

அத்துடன், குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை ஒரே இடத்தில் நேர்காணல் செய்ய முடிந்ததால், இந்த சிறப்பு முகாம் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமல்லாது, ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

பங்கேற்ற நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளும்:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஒரு ஹோட்டல், ஒரு கூரியர் நிறுவனம், ஒரு காப்பீட்டு நிறுவனம், ஒரு பள்ளி நிர்வாகம், சூப்பர் மார்க்கெட், HR ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் போன்றவை பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. முகாமில் பங்கேற்ற நிறுவனங்கள் அனைத்தும் சேல்ஸ், ப்ரோமோஷன், என்ஜினியரிங், கேஷியர், ஹெல்த் இன்சூரன்ஸ் கன்சல்ட்டிங், HR, ஆசிரியர், ஓட்டுநர் உட்பட பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் இலவசமாகப் பதிவு செய்து நேர்காணல் நடைமுறைகளை எளிதாக முடிப்பதற்கு, 3000 பேரைக் கொண்ட WIT குழுவில் இருந்து பல தன்னார்வலர்கள் இந்த சிறப்பு முகாமை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியதாகவும் மெர்லின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நேரடி நேர்காணலில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்களில் தகுதிவாயந்த 100 பெண்கள், வேலை வாய்ப்பை வழங்கவுள்ள நிறுவனங்களால் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்த சுற்றுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலகங்களில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மெர்லின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களின் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர்களும், அடுத்த கட்டத்திற்கு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டவர்களும், WITன் இந்த முயற்சி தங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உத்வேகத்தை கொடுத்ததாகக் கூறியதுடன் இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!