அபுதாபி பிக் டிக்கெட்டில் 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்ற இந்தியர்..!! 700,000 திர்ஹம்ஸ் கடனில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அபுதாபி பிக் டிக்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மே மாதத்திற்கான டிராவில், அஜ்மானை சேர்ந்த திலீப்குமார் எல்லிக்கோட்டில் பரமேஸ்வரன் என்பவர் 10 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசை வென்றுள்ளதாக அபுதாபி பிக் டிக்கெட் அறிவித்துள்ளது. இவர் அஜ்மானில் ஒரு ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் 5000 திர்ஹம்ஸ் மாத சம்பளத்தில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கேரளா மாநிலம் திரிசூர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப்குமார் எல்லிக்கோட்டில் பரமேஸ்வரன் வென்ற டிக்கெட் எண் 076713 ஐ கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஆன்லைனில் வாங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து திலீப்குமார் கூறுகையில், தனக்கு 700,000 திர்ஹம்ஸ் கடன் நிலுவையில் உள்ளது. அந்த கடனை தீர்க்க இது பெரிதும் உதவியாக அமைந்து விட்டது என்றார். மேலும் எனக்கு 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் இந்த பணத்தின் மூலம் அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு கல்வியை வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திலீப்குமார் அஜ்மானில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் ஏழு ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.