அமீரக செய்திகள்

மத்திய கிழக்கின் முதல் ஹை-ஸ்பீட் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை உருவாக்கும் ADNOC!! கார்பன் உமிழ்வைக் குறைக்கும் ஹைட்ரஜன்….

அபுதாபியின் ADNOC குழுமமானது மத்திய கிழக்கின் முதல் ஹை-ஸ்பீட் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை உருவாக்கி வருகிறது. இந்த அதிவேக ஹைட்ரஜன் நிரப்பும் நிலையம், அபுதாபியில் இருக்கக்கூடிய மஸ்தார் (Masdar) நகரில் கட்டப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுத்தமான கிரிட் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரோலைசரைப் பயன்படுத்தி நீரிலிருந்து சுத்தமான ஹைட்ரஜனை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

Toyota மற்றும் Al-Futtaim Motors உடனான ஒத்துழைப்பில் ADNOC ஆனது, சுத்தமான ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தி அதிவேக ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை சோதனை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Toyota மற்றும் Al Futtaim மோட்டார்ஸ் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரஜன் பயன்பாடு, ஆற்றல் மாற்றத்திற்கான ஒரு முக்கியமான மாற்று எரிபொருளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பெரும்பாலும், பெட்ரோல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும்போது, அதிகளவில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு (CO2) என்ற நச்சு வாயுவை உருவாக்காத ஹைட்ரஜன், மற்ற எரிபொருளையும் விட அதிக ஆற்றல் கொண்டது என்றும் பேட்டரி மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது வாகனங்களுக்கு நீண்ட டிரைவிங் ரேஞ்ச் மற்றும் விரைவான எரிபொருள் நிரப்பும் நேரத்தையும் கொடுக்கிறது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நேஷனல் ஹைட்ரஜன் ஸ்ட்ரேட்டஜியை (National Hydrogen Strategy) ஆதரிப்பதற்காக, ஹை-ஸ்பீட் ஹைட்ரஜன் நிரப்புதளுடன் ஹைட்ரஜனை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதை திட்டம் எடுத்துக்காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ADNOC Distribution இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் பணிகள் நிறைவடைந்ததும் நிலையத்தை இயக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, துபாய் கோல்ஃப் சிட்டியில் உள்ள இரண்டாவது நிலையம், வழக்கமான ஹைட்ரஜன் எரிபொருள் அமைப்புடன் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

வலுவான முதலீடுகள்:

ADNOC அதன் ஸ்ட்ரேட்டஜியில் முதன்மையானதாக டிகார்பனைசேஷனை (Decorbonation) கொண்டு வரும் அதேவேளையில், நாளைய தூய்மையான ஆற்றல்களை தேர்வு செய்யும் ஒரு சப்ளையராக இருப்பதற்கு வலுவான முதலீடுகளை செய்வதாக ADNOC நிர்வாக இயக்குனர் மற்றும் CEO டாக்டர் சுல்தான் அகமது அல் ஜாபர் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் அதன் நேஷனல் ஹைட்ரஜன் ஸ்ட்ரேட்டஜியை அங்கீகரித்த சில வாரங்களுக்குப் பிறகு, ADNOC இன் அதிவேக ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தின் கட்டுமானம் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது நாட்டின் ஹைட்ரஜனில் முதலீடுகளை அதிகரிக்கும் என்றும் இது ஹைட்ரஜன் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முடுக்கிவிடுவதுடன் கார்பனைக் குறைக்கும் ஹைட்ரஜனின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களிடையே அமீரகத்தின் நிலையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!