அமீரக செய்திகள்

பிக்டிக்கெட்டின் வாராந்திர இ-டிராவில் வென்ற நான்கு இந்தியர்கள்..!! ஒவ்வொருவருக்கும் தலா 100,000 திர்ஹம் ரொக்கப் பரிசு..!!

அபுதாபி பிக்டிக்கெட்டின் வாராந்திர இ-டிராவில் துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய இடங்களில் வசித்து வரும் நான்கு இந்திய வெளிநாட்டவர்கள் தலா 100,000 திர்ஹம் ரொக்கப் பரிசை வென்றுள்ளனர். இந்த வெற்றியாளர்கள் அஜய் விஜயன், முஜீப் பாக்யாரா, ஃபிரோஸ் குஞ்சுமோன் மற்றும் முகமது அசாருல் ஆகியோர் எனவும் பிக்டிக்கெட் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 இல் இருந்து துபாயில் IT துறையில் பணிபுரிந்து வரும் முதல் வெற்றியாளரான 41 வயது அஜய் விஜயன் கடந்த எட்டு வருடங்களாக தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து பிக்டிக்கெட்டை வாங்கி வருவதாகவும், டிராவில் வென்ற ரொக்கத் தொகையை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் ஒரு உணவு விடுதியில் பணியாளராக பணிபுரிந்து வரும் 33 வயதான முஜீப் பாக்யாரா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது ரூம்மேட்கள் ஏழு பேருடன் சேர்ந்து பிக் டிக்கெட்டை வாங்கி வருவதாகவும் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் இது விரைவில் பிறக்கவிருக்கும் தன் மகனின் அதிர்ஷ்டம் என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார்.

அடுத்ததாக 40 வயதான ஃபிரோஸ் குஞ்சுமோன் மூன்றாவது வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அஜ்மானில் ஓட்டுநராகப் பணிபுரியும் குஞ்சுமோன், கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மாதம் தவறாமல் பிக் டிக்கெட்டை வாங்கி வருவதாகவும், தற்போது வென்ற பரிசை 20 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்து நான்காவது வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஷார்ஜாவில் வசிக்கும் 54 வயதான முகமது அசாருல் என்பவர் ஆவார்., 2009 ஆம் ஆண்டு முதல் பிக் டிக்கெட்டின் வாடிக்கையாளராக இருந்து வரும் இவருக்கு இது அவரது இரண்டாவது வெற்றியாகும், ஏற்கனவே 2017 இல் 40,000 திர்ஹம்களை இவர் வென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த பிக்டிக்கெட்டிற்கான ரேஃபிள் டிக்கெட்டுகளை https://www.bigticket.ae/ என்ற ஆன்லைன் இணையதளத்திலும், அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களிலும் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!