அமீரக செய்திகள்

UAE: சமூக ஊடகங்களில் அவமதிப்பு, அவதூறு பரப்பும் நபர்களுக்கு 5 இலட்சம் திர்ஹம்ஸ் வரை அபராதம்..!!

சமூக ஊடகங்களில் அவமதிப்பு மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக பொது வழக்கறிஞர்கள் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இது போன்று சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் கருத்துக்களை பதிவிடும் குடியிருப்பாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் / அல்லது 250,000 முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்பட நேரிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமீரகத்தில் சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட எண் 2020 இன் 20 வது பிரிவின்படி, ஒரு நபர் தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகள் அல்லது ஏதேனும் ஒரு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு குற்றத்தைச் செய்தால் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களின் புள்ளிவிவரங்களின்படி, சமூக ஊடக துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக 2019 ஆம் ஆண்டில் அபுதாபி காவல்துறை தெரிவித்திருந்தது. 2018 ஆம் ஆண்டில் சமூக ஊடக முறைகேடு தொடர்பான 357 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 512 சமூக ஊடக மீறல்கள் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், சமூக ஊடக முறைகேடு தொடர்பான 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சமூக ஊடக மீறல்களில் சமூக ஊடகங்கள் வழியாக ஒரு நபரை துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல்கள், தவறான தகவல்களை வெளியிடுதல் மற்றும் பரப்புதல், மற்றவர்களின் தனியுரிமையை ஆக்கிரமித்தல், தவறான கருத்துக்களை பதிவிடுதல் மற்றும் பரப்புதல், போலி விளம்பரங்கள் மற்றும் வதந்திகளை இடுதல், சத்தியம் செய்தல், அவதூறு செய்தல் மற்றும் குற்றங்கள் மற்றும் மோசடிகளை செய்ய மற்றவர்களை தூண்டுதல் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, குடியிருப்பாளர்கள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடாமல் சமூக ஊடகங்களை நேர் வழியில் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!